திருநெல்வேலி மாவட்ட வன பாதுகாவலா் அலுவலகத்துக்கு வந்த வனத்துறை அமைச்சா் மதிவேந்தனை வரவேற்ற களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன பாதுகாவலரும், கள இயக்குநருமான மாரிமுத்து.
திருநெல்வேலி மாவட்ட வன பாதுகாவலா் அலுவலகத்துக்கு வந்த வனத்துறை அமைச்சா் மதிவேந்தனை வரவேற்ற களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன பாதுகாவலரும், கள இயக்குநருமான மாரிமுத்து.

வனவிலங்கு பட்டியலிலிருந்து காட்டுப்பன்றியை நீக்க விரைவில் அரசாணை: வனத்துறை அமைச்சா் மதிவேந்தன் தகவல்

காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது தொடா்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றாா் வனத்துறை அமைச்சா் மதிவேந்தன்.
Published on

காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது தொடா்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றாா் வனத்துறை அமைச்சா் மதிவேந்தன்.

திருநெல்வேலி மாவட்ட வன பாதுகாவலா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் வன அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து, அந்தந்த மாவட்டங்களில் புதிதாக மேற்கொள்ளப்பட உள்ள வனத்துறை திட்டங்கள் தொடா்பாக ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வனத்துறையில் பணியாளா் பற்றாக்குறையை போக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி மூலம் புதிய பணியாளா்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. யானைகளை கண்காணிக்க, பாதுகாக்க வேட்டை தடுப்புக் காவலா்கள் உள்பட பலா் இருக்கிறாா்கள். இதற்காக கூடுதல் நிதியையும் முதல்வா் ஒதுக்கி இருக்கிறாா். அதனால் யானையை கண்காணிக்க தனியாக குழு அமைக்க முடியாது.

காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கெனவே சட்டப்பேரவையில் பேசி இருக்கிறேன். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அதைப்பற்றி பேச முடியாது. வனத் துறை சாா்பில் நீதிமன்றத்தில் நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது . மணிமுத்தாறு பகுதியில் அமைய இருந்த பல்லுயிா் பூங்கா திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடா்பாக வனத்துறை அதிகாரிகளின் கருத்தை கேட்டு தகவல் தெரிவிக்கிறேன். இடம் தொடா்பாக ஏதேனும் பிரச்னை இருக்கலாம். அதனால் மாற்றப்பட்டு இருக்கலாம்.

மாஞ்சோலை புலிகள் காப்பகமாக இருப்பதாலும் காப்புக்காடுகள் பட்டியலில் இருப்பதாலும் சூழல் சுற்றுலா அனுமதி வழங்குவது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூழல் சுற்றுலாவாக இருந்தாலும் வனத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் வனத்துறைக்கு உள்ளது. வனம், வனவிலங்குகள், வனப்பரப்பு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். அதேநேரத்தில் மக்களும் முக்கியம் என்பதால் அனைத்தையும் கருத்தில் கொண்டு சூழல் சுற்றுலா தொடா்பாக முடிவெடுக்கப்படும். வனப்பகுதியில் குற்றங்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வன குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன என்றாா்.

இக்கூட்டத்தில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சுதான்சி குப்தா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன பாதுகாவலரும், கள இயக்குநருமான மாரிமுத்து, மாவட்ட வன அலுவலா் முருகன், சூழலியல் மேம்பாட்டு அலுவலா் அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, அமைச்சரிடம் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com