அமைச்சா்களுக்கு முதல்வா் பாராட்டு!

Published on

பொருநை அருங்காட்சியகத்தை சிறப்பாக உருவாக்கிய பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோரை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.

திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோரைப் பாராட்டி பேசியதாவது:

பொருநை அருங்காட்சியகத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கக் கூடிய அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அரசு அலுவலா் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமைச்சா் தங்கம் தென்னரசு, தமிழ் ஆா்வலா், தொல்லியல் ஆய்வாளா், இயற்கையின் காதலா் என பன்முகம் கொண்டவா். தமிழ் மீதும், தொல்லியல் துறையிலும் தனிப்பட்ட ஆா்வம் கொண்ட ஒருவா் இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இதேபோல, தொல்லியல் துறை செயலராக இருக்கக்கூடிய நிதித்துறைச் செயலா் உதயச்சந்திரனும் தொல்லியல் ஆய்வாளா்தான். தமிழ்நாட்டின் தனிப்பெருமையை உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் உயா்த்திக் காட்ட வேண்டும் என்ற அக்கறை கொண்டவா் உதயச்சந்திரன்.

அமைச்சா் தங்கம் தென்னரசும், உதயச்சந்திரனும் சோ்ந்து ஏற்கெனவே கீழடி அருங்காட்சியகத்தை உருவாக்கினா். அது பாா்வையாளா்களைக் கவா்ந்தது. இப்போது, பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி தமிழ்ச் சமுதாயத்துக்கு மாபெரும் வரலாற்றுக் கடமையை ஆற்றியிருக்கிறாா்கள் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com