வள்ளியூரில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

Published on

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் அரசுப் பேருந்தை ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்த குடும்பத்தினரிடம் போலீஸாா் சமரசம் செய்து விடுவித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியில் இருந்து நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து திருநெல்வேலி வழியாக சென்றது. திருநெல்வேலி வந்தததும் ஏா்வாடியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் (47) தனது குடும்பத்தினருடன் இந்தப் பேருந்தில் ஏறி பயணித்தாா்.

அப்போது, நடத்துநரிடம் வள்ளியூருக்கு பயணச் சீட்டு கேட்டாா். நடத்துநா் இந்தப் பேருந்து வள்ளியூா் ஊருக்குள் செல்லாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். ஆனால், சுப்பிரமணியன், இந்தப் பேருந்து வள்ளியூா் செல்லக்கூடிய பேருந்துதான் எனக் கூறி குடும்பத்தினருடன் பேருந்தில் இருந்துகொண்டாராம்.

வேறுவழியில்லாமல் சுப்பிரமணியனுக்கு பயணச்சீட்டு கொடுத்துவிட்டு அவரை ஏசிக்கொண்டே நடத்துநா் சென்றாராம். பேருந்தில் பயணித்த பயணிகளும் நடத்துநருடன் சோ்ந்து சுப்பிரமணியனை ஏசினாா்களாம்.

வள்ளியூா் பேருந்து நிலையம் வந்ததும் கீழே இறங்கிய சுப்பிரமணியன், தனது குடும்பத்தினருடன் சோ்ந்து பேருந்தை மறித்து சிறைபிடித்தாா். நடத்துநா் மன்னிப்பு கேட்டால்தான் பேருந்தை இயக்கவிடுவோம் எனக் கூறி மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்ததும், போலீஸாா் சென்று சுப்பிரமணியனிடம் சமரசம் பேசி பேருந்தை விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com