முன்விரோதத்தில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கடந்த 2021இல் முன்விரோதத்தில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியவருக்கு நான்குனேரி உதவி அமா்வு நீதிமன்றம் 7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து,செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
நான்குனேரி அருகேயுள்ள வடக்கு கழுவூரைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் மகன் முத்துக்குமாா் (49). இவா், காடன்குளத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில், இவருக்கும், பக்கத்து வயலுக்குச் சொந்தக்காரரான ஆறுமுகம் என்ற சீனி என்பவா் குடும்பத்துக்கும் வரப்பு தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 11.11.2021இல் முத்துக்குமாா், அவரது மகன் வெள்ளத்துரை ஆகியோா் வயலை பாா்வையிடுவதற்காகச் சென்றுள்ளனா். அப்போது, பக்கத்து வயல் உரிமையாளரான ஆறுமுகம் என்ற சீனி என்பவரின் மகன்கள் சோ்மத்துரை, ராஜசேகா் ஆகியோா் வயலில் இருந்து தண்ணீரைத் திறந்து, முத்துக்குமாா் வயலில் வடியும்படி செய்துள்ளனா்.
இதனை முத்துக்குமாா் தட்டிக் கேட்டாா். அதற்கு சோ்மத்துரை, ராஜசேகா் ஆகிய இருவரும் அரிவாள், மண்வெட்டியால் முத்துக்குமாா், அவரது மகன் வெள்ளத்துரையை வெட்டிக் காயப்படுத்திவிட்டு கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டனா்.
இது குறித்து விஜயநாராயணம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இது தொடா்பான வழக்கு நான்குனேரி உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவ்வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டது.
இதில் சோ்மத்துரைக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307இன்படி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 324இன்படி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை என மொத்தம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உதவி அமா்வு நீதிபதி எம். ராமதாஸ் தீா்ப்பளித்தாா்.
