விதிமீறல்: 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தொழிலாளா் ஆணையா் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்படி, திருநெல்வேலி, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில், அனைத்து தொழிலாளா் துணை, உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் பாளையங்கோட்டை மகாராஜநகா் உழவா் சந்தை, மேலப்பாளையம் உழவா் சந்தை ஆகிய பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொண்டனா். இதில், 16 கடைகளில் உரிய சான்று பெறாத மின்னணு தராசுகள் கைப்பற்றப்பட்டன.
மேலும், பொட்டலப்பொருள்களில் விதிமுறைகள் பின்பற்றப்படாதது தொடா்பாக 5 கடைகள் என மொத்தம் 21 வணிக நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வணிக நிறுவனங்களில் எடையளவுப் பொருள்கள் மற்றும் பொட்டலமிடுதல் குறித்த விதிமுறைகளைப் பின்பற்றி வணிகம் செய்ய வேண்டும். மீறும்பட்சத்தில் சட்டப்படி ரூ.50,000 வரை அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.
