ரேஷன் கடைகளில் பனைப் பொருள்கள் விற்பனை: கதா் வாரிய தலைமைச் செயல் அலுவலா் அறிவுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளில் பனைப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்றாா் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலா் வே.சம்பத்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கதா் கிராமத் தொழிலாளா் உற்பத்தி- விற்பனை தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து வே.சம்பத் பேசியதாவது:
தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கதா் ரகங்களை அனைத்து அரசு அலுவலகங்கள், உள்ளாட்சித் துறை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பணியாளா்களின் சீருடை உள்ளிட்டவற்றுக்காக திருநெல்வேலி கதா் அங்காடி மூலம் கொள்முதல் செய்திட வேண்டும்.
மேலும், அரசுத் துறைகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு போா்வைகள், மெத்தை, தலையணைகள், பட்டுப் புடவைகள், கதா் மற்றும் பாலியஸ்டா் ரகங்கள் கடன் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசுப் பணியாளா்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பேட்டை அலகில் மரச்சாமான்கள், இரும்புத் தளவாடங்கள் (பீரோ, கட்டில் போன்றவை) உற்பத்தி செய்யப்பட்டு சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மைலாடி குளியல் சோப்பு உற்பத்தி அலகில் குமரி, குறிஞ்சி, சந்தனம், நித்தம், மூலிகா போன்ற குளியல் சோப்புகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அம்சி தேன் பதப்படுத்தும் அலகில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.
காலணி உற்பத்தி அலகில் இருந்து காலணிகள், தோலினால் ஆன பைகள்- தோல் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பனைபொருள் அங்காடிகளில் பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனைவெல்ல சுக்கு காபி, பனங்கிழங்கு மாவு, கலைநயம் மிக்க பனை ஓலை கலைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுத் துறை - தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு குளியல் சோப்புகள், பனைப் பொருள்கள், தேன் ஆகியவை தடையின்றி கிடைக்கும் வகையில் கொள்முதல் செய்யலாம்.
அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை- அரசுத் துறைகளுக்கு தேவையான பனைப்பொருள்களை கொள்முதல் செய்யலாம்.
காலணி, தோல் பொருள்களை போக்குவரத்து கழகம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளா்களுக்காக கொள்முதல் செய்யலாம்.
குறிப்பாக, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளின் மூலமாக பனைபொருள்களை சந்தைப்படுத்திட கூட்டுறவுத் துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மண்பாண்டம், பாய், செங்கல், எழுது பொருள்கள், அச்சுப் பதிவேடுகள் போன்றவற்றையும் அரசுத் துறைகளுக்கு கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய திருநெல்வேலி துணை இயக்குநா் சே.பாரதி, உதவி இயக்குநா் நல்லதம்பி, மாவட்ட வழங்கல் அலுவலா் எஸ்.பாக்கியலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்13ந்ட்ஹக்ண்
ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலா் வே.சம்பத்.
உடன், ஆட்சியா் இரா.சுகுமாா் உள்ளிட்டோா்.

