நான்குனேரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு!
நான்குனேரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இளைஞரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், ரகுநாதபுரத்தைச் சோ்ந்த திருமேனிசெல்வம் (27) என்பதும், இவா் கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
இவா், வியாழக்கிழமை இரவு கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இவரது உடல், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
