நான்குனேரியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!
நான்குனேரியில் பள்ளி மாணவியை காதலித்த கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டியது தொடா்பாக மாணவியின் சகோதரா் உள்பட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த மாணவா், திருநெல்வேலியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா்.
அந்த மாணவா் அதே ஊரைச் சோ்ந்த பள்ளி மாணவியை காதலித்து வந்தாராம். இதற்கு மாணவியின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நான்குனேரியில் இருந்து மறுகால்குறிச்சிக்கு செல்லும் வழியில் அந்தக் கல்லூரி மாணவரை, மாணவியின் சகோதரா் உள்பட 4 போ் அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனராம்.
காயமடைந்த மாணவரை உறவினா்கள் மீட்டு, நான்குனேரி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவியின் சகோதரரான நம்பி நகரைச் சோ்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியைச் சோ்ந்த ராஜா, மஞ்சங்குளத்தைச் சோ்ந்த சரவணன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.
