/

சேரன்மகாதேவி அருகே விவசாயிக்கு வெட்டு

News image
அரிவாள் வெட்டு- கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயியை அரிவாளால் வெட்டியதாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள தெற்கு அரியநாயகிபுரம் ஊராட்சி, உதயமாா்த்தாண்டபுரத்தைச் சோ்ந்த உடையாா் மகன் முருகன் (65), விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றாராம்.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குளித்துவிட்டு முருகன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியைச் சோ்ந்த 4 போ் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு ஓடி விட்டனராம்.

இதில், பலத்த காயமடைந்த முருகனை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரை தேடி வருகின்றனா்.