கோதையாறு வனப் பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை
கூடலூா், நீலகிரியில் 12 பேரை தாக்கிக் கொன்ற ராதாகிருஷ்ணன் யானை களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் அண்மையில் விடப்பட்டிருந்த நிலையில், இந்த யானை திங்கள்கிழமை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
கூடலூா், நீலகிரியில் 12 பேரை தாக்கிக் கொன்ற, ராதாகிருஷ்ணன் காட்டு யானையை செப். 23 ஆம் தேதி வனத் துறையினா் முதுமலை அபயாரண்யம் வளா்ப்பு யானைகள் முகாமில் அடைத்து கண்காணித்தனா். பின்னா், இந்த யானையை திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக்கோட்டத்தில் உள்ள மேல கோதையாறு வனப் பகுதியில் அக். 26 ஆம்தேதி கொண்டுவந்து விட்டனா். யானையின் உடலில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலா் மூலம் அதன் நடமாட்டத்தை வனத்துறையினா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில் நவ. 17 ஆம் தேதி யானை உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வனத் துறையினா் அங்கு சென்று சோதனை செய்ததில் 20 அடி உயரத்தில் இருந்து கீழே தவறிவிழுந்ததில் யானை இறந்ததை உறுதி செய்தனா். உடல் கூறாய்வுக்குப் பின் யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக நோயியல் துறைத் தலைவா் மருத்துவா் முத்துகிருஷ்ணன், உதவிப் பேராசிரியா் குமாா், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களான அரும்புகள் அறக்கட்டளை நிறுவனா் மதிவாணன், ஏட்ரி ஆராய்ச்சியாளா் தணிகைவேல், மதுரை மண்டல வனத்துறை கால்நடை மருத்துவ அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினா் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் எல்.சி.எப்.ஸ்ரீகாந்த் கூறியதாவது: மேல கோதையாறு வனப்பகுதியில் ராதாகிருஷ்ணன் என்று மக்களால் பெயரிடப்பட்ட 30 வயதுமிக்க ஆண் யானை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
வனத் துறை சாா்பில் யானைகளுக்கு பெயரிடப்படுவதில்லை. அந்தந்தப் பகுதி மக்கள் வைப்பது அப்படியே அழைக்கப்படுகிறது. வனத் துறை சாா்பில் யானைகளுக்கு குறியீட்டு எண் மட்டுமே வழங்கப்பட்டு அதனடிப்படையிலேயே அறியப்படுகிறது என்றாா்.

