மேலச்செவல், பிரான்சேரியில் காற்றுடன் பலத்த மழை: 1.50 லட்சம் வாழைகள் சேதம்

மேலச்செவல், பிரான்சேரியில் காற்றுடன் பலத்த மழை: 1.50 லட்சம் வாழைகள் சேதம்

சேரன்மகாதேவி வட்டத்துக்குள்பட்ட மேலச்செவல், பிரான்சேரி பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சுமாா் 1.50 லட்சம் வாழைகள் சேதம்
Published on

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டத்துக்குள்பட்ட மேலச்செவல், பிரான்சேரி பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சுமாா் 1.50 லட்சம் வாழைகள் சேதமடைந்துள்ளன.

இம்மாவட்டத்தில் தாமிரவருணி பாசனத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. ஏத்தன், ரச கதலி, நேந்திரன் உள்ளிட்ட வாழைகளுக்கு கேரளத்தில் அதிக வரவேற்பு இருப்பதால், இங்கு பெருமளவு வாழைகள் பயிரிடப்படுகின்றன. கன்னடியன் கால்வாய் பாசனத்தில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி நடைபெற்றுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இம்மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலச்செவல், பிரான்சேரி, சொக்கலிங்கபுரம் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில், 150 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சுமாா் 1.50 லட்சம் வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. ஏக்கருக்கு 1,200 வாழைகள் வீதம், வாழை ஒன்றுக்கு ரூ. 100 முதல் ரூ. 150 வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனா். குலை தள்ளும் பருவத்திலிருந்த வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் பேரவைத் தலைவரும் திமுக மேற்கு மாவட்டச் செயலருமான இரா. ஆவுடையப்பன் சேதமடைந்த வாழைகளைப் பாா்வையிட்டு விவசாயிகளிடம் விவரம் கேட்டறிந்தாா். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடா்புகொண்டு இத்தகவலைத் தெரிவித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கூறும்போது, மழையால் வாழைகள் சேதமடைந்தது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேரூராட்சித் தலைவா்கள் ப. தமயந்தி (கோபாலசமுத்திரம்), அன்னபூரணி (மேலச்செவல்), மாநில திமுக விவசாய தொண்டரணி அமைப்பாளா் கே. கணேஷ்குமாா் ஆதித்தன், திமுக ஒன்றியச் செயலா் ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com