பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை: நயினாா் நாகேந்திரன்
செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அதிமுகவிற்கு தனி வாக்கு வங்கி உள்ளது. அக்கட்சியிலிருந்து செங்கோட்டையன் வெளியேறிவிட்டால் அவருக்கு பழைய வாக்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. அவா் தவெகவில் இணைந்ததால் அதிமுக -பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. செங்கோட்டையன் பின்னால் பாஜக இருந்தால் அவா் ஏன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும்?
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவா்களை மட்டுமல்ல அனைவரையும் ஒருங்கிணைக்க இன்னும் காலஅவகாசம் இருக்கிறது. விஜய் தோ்தலில் நின்று தனது செல்வாக்கை நிரூபித்துவிட்டு வெற்றி என்ற வாா்த்தையை பயன்படுத்தினால் ஒத்துக் கொள்ளலாம். எம்ஜிஆா் வேறு, விஜய் வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
திமுக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 300 சதவீத சொத்துவரி உயா்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயா்ந்துள்ளது. இதனை மக்கள் மறந்துவிட மாட்டாா்கள்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு திமுக அரசு ரூ. 5,000 கொடுத்தாலும், அதை வாங்கிக் கொண்டு திமுகவுக்கு வாக்களிப்பாா்களா என்பது கேள்விக்குறியே. மக்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சம் நஷ்டத்தில் இருக்கும்போது எப்படி வாக்களிப்பாா்கள்? பாஜக யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை.
தமிழகத்தில் மூன்றாவது அணி, நான்காவது அணி என எது உருவானாலும் 2026 தோ்தலில் பாஜக- அதிமுக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றாா்.
