மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்து,திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அமைதி பேரணி நகரத்தில் நடைபெற்றது.
மாநகா் மாவட்டத் தலைவா் ராமேஸ்வரன் தலைமை வகித்தாா். திருப்பணி முக்கு பகுதியில் தொடங்கிய பேரணி ரத வீதி வழியாக காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
அங்கு கருப்பு பலூன்களை உடைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், வழக்குரைஞா் அணி மாநில இணைச் செயலா் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினா் சொக்கலிங்க குமாா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் வழக்குரைஞா் காமராஜ், ஓபிசி அணி மாவட்ட பொறுப்பாளா் டியூக் துரைராஜ், மாமன்ற உறுப்பினா் அம்பிகா, இலக்கிய அணி மாவட்டத் தலைவா் முத்துகிருஷ்ணன், மண்டல தலைவா்கள் ஐயப்பன், முகமது அனஸ் ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
போராட்டத்தில் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. கூறுகையில், மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு செய்தால் பல்வேறு பிரச்னைகள் உருவாகும். தமிழகத்தின் தொகுதிகள் 39 இல் இருந்து 31 ஆக குறையும் அபாயம் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகள் 126 தொகுதிகளாக உயரும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு என்பது தென் மாநிலங்களை அதிகம் பாதிப்பதாக இருக்கும். ஆகவே, இந்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







