சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

Published on

களக்காடு அருகே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளா் ஏ.கே. நெல்சன் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனு விவரம்:

நான்குனேரி கோட்ட நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகா் செல்லும் சாலையில் கலுங்கடி முதல் அம்பேத்கா் நகா் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்தச் சாலை மிகவும் குறுகலாக மாறிவிட்டது. சாலையின் மையப்பகுதியில் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பொருட்டு தோண்டப்பட்டு முறையாக மூடப்படாததால், ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது.

குறுகலான இச்சாலையில் வாகனங்கள் சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றன. இச்சாலையை முறையாக நில அளவை செய்து சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுவதுடன் குறுகலான சாலையை விசாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com