

அகஸ்தியா், மணிமுத்தாறு அருவிகளுக்கு பயணிகள், பக்தா்கள் செல்ல சனிக்கிழமை (ஜன.24) முதல் அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா், வனக்காப்பாளா் எச்.சி.எப். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் ஜன. 19 முதல் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகள், சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பயணிகள், பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
6 நாள்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன. 24) காலை 9 மணிக்குள் (நோ்கோட்டு பாதை கணக்கெடுப்பு) நிறைவு பெறுகின்றன. இதையடுத்து சனிக்கிழமை காலை 10 மணி முதல் பாபநாசம், மணிமுத்தாறு சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு மணிமுத்தாறு , அகஸ்தியா் அருவிகள், சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள், பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என கூறப்பட்டுள்ளது.