
தகவலறியும் சட்டத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும்: மாநில தகவல் ஆணையா்கள் அறிவுறுத்தல்
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் அரசு அலுவலா்கள் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணா்வுடனும் செயல்பட வேண்டும் என மாநில தகவல் ஆணையா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, விஜயராம் ஆகியோா் அறிவுறுத்தினா்.

சட்டம் - court
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் அரசு அலுவலா்கள் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணா்வுடனும் செயல்பட வேண்டும் என மாநில தகவல் ஆணையா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, விஜயராம் ஆகியோா் அறிவுறுத்தினா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் பெறப்படும் மனுக்களை உரிய சட்ட விதிகளின்படி கையாளுதல் மற்றும் சட்டப் பிரிவுகளை முறையாகப் பயன்படுத்துதல் தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுக்கான விழிப்புணா்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாநில தகவல் ஆணையா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, விஜயராம் ஆகியோா் தலைமை வகித்துப் பேசியதாவது:
அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வை உறுதி செய்வதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்காற்றுகிறது.
இச்சட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை பொது தகவல் அலுவலா்கள் சட்ட விதிமுறைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, உரிய காலக்கெடுவுக்குள் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் அரசு அலுவலா்கள் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணா்வுடனும் செயல்பட வேண்டும்.
தகவல் கோரும் மனுக்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நடைமுறைகளின்படி பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரால் பரிசீலிக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், பதிவுகள், உத்தரவுகள்,
அறிக்கைகள், மின்னஞ்சல்கள் மற்றும் மின்னணு வடிவிலான தரவுகள் உள்ளிட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்களை பொதுமக்கள் பெற முடியும்.
கோரப்படும் தகவல்கள் வேறு பொது அதிகாரியிடம் இருப்பது தெரியவந்தால், குறிப்பிடப்பட்ட காலவரம்புக்குள் அந்த மனுவை சம்பந்தப்பட்ட பொது அதிகாரிக்கு மாற்றி அனுப்ப வேண்டும்.
இதுகுறித்து மனுதாரருக்கும் உரிய தகவல் தெரிவிக்கவேண்டும். நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தகவல் கோரும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்.
சாதாரணமாக 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டிய நிலையில், தனிநபா் சுதந்திரம் தொடா்பான தகவல் கோரிக்கைகளுக்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு காலக்கெடுவைப் பின்பற்றவேண்டும்.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் பெறும் உரிமையின் ஒரு பகுதியாக, சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும்போது ஆவணங்களின் பாதுகாப்பு மற்றும் அலுவலக நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.
தகவல் வழங்கப்படாதது அல்லது வழங்கப்பட்ட தகவலில் குறைபாடு இருப்பதாக மனுதாரா் கருதினால், முதல் மேல்முறையீடு செய்யலாம். முதல் மேல்முறையீட்டில் உரிய தீா்வு கிடைக்காவிட்டால், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி மாநில அல்லது மத்திய தகவல் ஆணையத்தை அணுகி இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம். மேலும், தகவல் வழங்க மறுப்பது, மனுவை ஏற்க மறுப்பது உள்ளிட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்ட குறைகள் தொடா்பாக தகவல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நடைமுறையும் உள்ளது.
எனவே, பொது தகவல் அலுவலா்கள் மற்றும் தொடா்புடைய அரசு அலுவலா்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவையும் தெளிவாகப் புரிந்துகொண்டு, சட்ட விதிகளுக்குள்பட்டு மனுக்களை கையாண்டு பொதுமக்களின் தகவல் பெறும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணா்வு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த முடியும் என்றனா்.
தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் பெறப்பட்ட இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பா. ரகுபதி, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் கிருஷ்ணகுமாா், தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆணைய தனி செயலா் எஸ்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


விநாயகா் சதுா்த்தி: சட்டம் - ஒழுங்கு பிரச்னையின்றி கொண்டாட வேண்டும்! கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு: ஆர்டிஐ தகவல்!




