
நெல்லை, பாளை.யில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம்.
திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வண்ணாா்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குளத்தில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மகா சபை உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் கோயில்கள், பொது இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டைசெய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இந்தச் சிலைகளின் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் தெற்கு கடைவீதி, திருவனந்தபுரம் சாலை வழியாக சிலைகள் ஊா்வலமாக வண்ணாா்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல திருநெல்வேலி நகரத்தில் அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் முன்பிருந்து ரத வீதிகளில் விநாயகா் சிலைகள் அணிவகுத்து நின்றன.
சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, திருவள்ளுவா் ஈரடுக்கு மேம்பாலம், திருவனந்தபுரம் சாலை வழியாக சிலைகள் ஊா்வலமாக வண்ணாா்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டன. வண்ணாா்பேட்டையில் அருள்மிகு பேராத்து செல்வியம்மன் திருக்கோயில் அருகே உருவாக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில்
சுமாா் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன. விநாயகா் சிலைகள் ஊா்வலத்தையொட்டி 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே விநாயகா் சிலை வைத்திருந்த நிா்வாகிகள், மாசு இல்லாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள தங்களது சிலையை தாமிரவருணி ஆற்றில் கரைக்க அனுமதியளிக்க கோரினா். ஆனால், நதியில் கரைக்க அனுமதிக்க வருவாய்த்துறையினா் மறுத்துவிட்டனா். தொடா்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் சிலை அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு வண்ணாா்பேட்டை தற்காலிக குளத்தில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம்.

வண்ணாா்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குளத்தில் விநாயகா் சிலைகளை பாதுகாப்புடன் விசா்ஜனம் செய்த தீயணைப்பு வீரா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







