சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விரைவில் அறிவிப்பு: அமைச்சர் கே.டி. பச்சைமால்
சத்தியமங்கலம் வன சரணாலயத்தை மாநிலத்தின் 4-வது புலிகள்


சத்தியமங்கலம் வன சரணாலயத்தை மாநிலத்தின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்க முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, தமிழக வனத் துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் தெரிவித்தார்.
தமிழ்நாடு வனத் துறை சார்பில் மாநில வன உயிரின வார தொடக்க விழா நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தலைமை வகித்தார்.
விழாவை அமைச்சர் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும் வழங்கிப் பேசியதாவது:
காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதிமுதல் ஒரு வாரத்துக்கு வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது.
வனங்களும், வன விலங்குகளும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்குவது வனங்கள்.
வனங்களைப் பாதுகாப்பதில் தமிழக முதல்வர் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகிறார். 2012-ல் எடுக்கப்பட்ட கணக்குப்படி தமிழகத்தில் மொத்த வனப் பரப்பில் 23.9 சதவிகித பகுதியில் வன உயிரின உய்விடங்கள் அமைந்துள்ளன. இதில் 10 வன உயிரின சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 14 பறவை சரணாலயங்கள் அடங்கும்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வன சரணாலயத்தை மாநிலத்தின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நிகழாண்டில் ராமநாதபுரம் மாவட்டம், சக்கரைகோட்டை கண்மாய், மாநிலத்தின் 14-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள களக்காடு-முண்டன்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள சாம்பல் நிற அணிகள் சரணாலயம், நெல்லை கோட்டம் கரியன் சோலை, புல்மலை ஆகிய வன உயிரின சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் உலகளாவிய தனித்துவம் பெற்றுள்ளதால், அவற்றை யுனஸ்கோ நிறுவனத்தின் உலக மரபியல் குழு 2012-ம் ஆண்டில் உலக இயற்கை மரபு பகுதியாக அறிவித்துள்ளது.
புலி, யானை, வரையாடு, சிங்கவால் குரங்கு போன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் வன வனவிலங்குகளைப் பாதுகாக்க சிறப்பான சரணாலயப் பகுதிகள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் களக்காடு முண்டன்துறை, ஆனைமலை, முதுமலை ஆகிய புலிகள் காப்பகங்கள் உள்ளன.
அதுபோல் நீலகிரி கிழக்குத் தொடர்ச்சி மலை, கோவை, ஆனைமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 4 யானைகள் காப்பகங்களும் உள்ளன.
யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆக்கபூர்வமான நடவடிக்கையின் காரணமாக யானைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டதன் காரணமாக யானைகளின் எண்ணிக்கை 4015ஆக உயர்ந்துள்ளது.
வனப் பகுதியில் தீவனப் பெருக்கம், மற்றும் நீராதார மேம்பாட்டுப் பணிகளுக்கு முதல்வர் ரூ.20.87 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
2011-2012ஆம் ஆண்டில் மொத்தம் 226 கி.மீ. தொலைவுக்கு தடுப்பு அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை மாவட்ட வன எல்லையோரங்களில் வன உயிரினங்களால் ஏற்படும் பயிர்ச் சேதம் வெகுவாகக் குறைந்துள்ளது.
அழிந்து வரும் மிக அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாத்து பராமரிக்க திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
விழாவில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலர் சி.வி. சங்கர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கௌதம்டே ஆகியோர் முன்னிலை வகித்தார். களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் சஞ்சய் கே. ஸ்ரீவஸ்தவா, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர்கள், எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ். சாரதாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆர். குணசேகரன் வரவேற்றார். நெல்லை மண்டல வனப் பாதுகாவலர் எஸ்.கே. சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...