காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி கடற்கரையைச் சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?

கன்னியாகுமரி கடற்கரையைச் சீரமைக்கும் பணியை மீண்டும் தொடங்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News image
Updated On :25 அக்டோபர் 2016, 2:33 am

தி. ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரி கடற்கரையைச் சீரமைக்கும் பணியை மீண்டும் தொடங்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நம்நாட்டுக்கு அன்னிய முதலீடுகளை அதிகமாக பெற்றுத்தரும் துறைகளுள் சுற்றுலாத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் முதல் 10 அழகிய கடற்கரைகள் பட்டியலில் கேரளத்தின் கோவளம் முதலிடம் வகிக்கிறது.
இந்த கடற்கரையில் பொழுதைக் கழிக்க உலக நாடுகள் முழுவதும் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் இம்மாநிலத்தில் சுற்றுலாவுக்கென தனிச்சட்டம் உள்ளதால் சுற்றுலா சார்ந்த தொழில்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இவைதவிர கேரளத்தில் வர்கலா கடற்கரை, கோவாவின் அஞ்சுனா, மார்கோ, மாபுஸா, கோல்வா, கலங்கூட், பாகா ஆகிய கடற்கரைகள் சிறந்து விளங்குகின்றன.
சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரி மற்றும் வட்டக்கோட்டையில் இயற்கை எழில்வாய்ந்த அழகிய கடற்கரைகள் அமைந்துள்ளபோதிலும், இவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்காதது சுற்றுலா ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.
இங்குள்ள முக்கடல் சங்கமத்தில் பல வண்ணங்களில் மணல் குவிந்து கிடக்கும் அற்புத காட்சி காண்போரை கவர்ந்திழுப்பதாக இருந்தது.
இப்பகுதியில் பலமணி நேரம் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து பொழுதைக் கழிப்பது வழக்கம். இங்கு கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னர் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டம் காரணமாக இப்பகுதி முற்றிலும் அழிந்து போனது.
காமராஜர் மணிமண்டபம் தொடங்கி, மணல்தேரி வரையிலான 1 கி.மீ., தொலைவுக்கு அழகிய நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரைப் பகுதியை வெளிநாட்டு கடற்கரைக்கு இணையாக பராமரிக்கும் பொருட்டு ரூ. 14 கோடியில் மெகா சுற்றுலாத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் திடீரென இத்திட்டம் முடக்கப்பட்டது.
நீண்ட நாள்களுக்குப் பின்னர், இக்கடற்கரைப் பகுதியில் அலங்கார நடைபாதை, அலங்கார மின்விளக்குகள், புல் தரைகள் அமைக்கப்பட்டன. ஆனால், அவை சரிவர பராமரிப்பு செய்யப்படாமல் அழிவின் பிடியில் சிக்கியுள்ளது. புதர் மண்டிக் கிடப்பதால் இரவு வேளைகளில் சமூக விரோதச் செயல்களும் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில் இதனைச் சீரமைக்க மத்திய, மாநில சுற்றுலாத் துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, சுற்றுலா ஆர்வலரான டி. ஜான்சேவியர்ராஜன் கூறியதாவது: தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களுள் ஒன்றான குமரியில் கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, முட்டம், சங்குத்துறை, தேங்காய்பட்டினம் உள்ளிட்ட அழகிய கடற்கரைகள் அமையப் பெற்றுள்ளன. இவற்றை கண்டு ரசிக்க வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால், இப்பகுதிகளை பயணிகள் விரும்பும் வகையில் பராமரிக்க சுற்றுலாத் துறை ஆர்வம் காட்டவில்லை. அழிவின் பிடியில் சிக்கியுள்ள குமரி கடற்கரையைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் சுற்றுலாத் துறையினர் அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:  கன்னியாகுமரி கடற்கரையை அழகுபடுத்தும் விதமாக ரூ. 14 கோடி செலவில் மெகா சுற்றுலாத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான பணிகள் போதிய திட்டமிடுதலுடன் தொடங்கப்பட்டது.
ஆனாலும், தொடர் இயற்கை சீற்றங்களால் பணிகள் தடைபட்டன. ஏற்கெனவே முடிந்த பணிகள் முடங்கியதால் அவற்றை பராமரிப்பு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. தற்போது இதனை சீரமைக்க மேலும் பலகோடி நிதி தேவைப்படும் என்பதால் சுற்றுலாத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிதிஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில் பயணிகள் விரும்பும் வகையில் கடற்கரை மற்றும் பூங்கா சீரமைக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.