சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

குமரியில் மீண்டும் ரப்பர் பால்வடிப்பு தொடங்கியது: தொழிலாளர்கள் மகிழ்ச்சி

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் ரப்பர்  மரங்களில் பால்வடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:18 pm

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் ரப்பர்  மரங்களில் பால்வடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ரப்பர்  மரங்களில் பால்வடிப்பை பிரதான விவசாயமாகக் கொண்ட குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-ஜனவரி  மாதத்தில் ஏற்படும் குளிர் கால  இலையுதிர்வையடுத்து  பிப்ரவரி மாதத்தில் பால்வடிப்பு நிறுத்தப்படும். நிறுவனங்களாக செயல்படும் ரப்பர் தோட்டங்களில்  குறைந்த நாள்களும்,  சிறு தோட்டங்களில் சற்று அதிக நாள்களும் பால்வடிப்பு நிறுத்தப்படும்.  பின்னர் ஈஸ்டர் பண்டிகைக்குப் பிறகு அல்லது மழையின் வரவைத் பொறுத்து மீண்டும் பால்வடிப்புத் தொடங்கப்படும். 
மீண்டும் பால்வடிப்பு: மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் ரப்பர் பால்வடிப்பு மீண்டும் பரவலாகத் தொடங்கி வருகிறது.  நிறுவனங்களாக செயல்படும் பெரும் ரப்பர் தோட்டங்களில்  ஒவ்வொரு ஆண்டும்  பால்வடிப்பு தொடங்கும் போது தொழிலாளர்களுக்கு  பால் வடிப்பிற்காக வழங்கப்படும் காடுகள் குலுக்கல் முறை தேர்வு செய்து வழங்கப்படுகின்றன. 
புயல் பாதிப்பால் தொழிலாளர்கள் பாதிப்பு:  மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய ஒக்கிப் புயலால் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மரங்கள் சாய்ந்ததால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.  அதே வேளையில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு பால்வடிப்பதற்கான மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  எனினும் மாவட்டத்தில் மீண்டும் பால்வடிப்பு தொடங்கியுள்ள நிலையில் பால்வடிப்புத் தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
இதுகுறித்து குலசேகரம் கொல்லாறையைச் சேர்ந்த பால்வடிப்புத் தொழிலாளி விஜுகுமார் கூறியதாவது: 
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ரப்பர் தோட்டங்களில் மீண்டும் பால்வடிப்புத் தொடங்கியுள்ளது.  எனினும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பால் குறைவாகவே உற்பத்தியாகிறது. பால்வடிப்பு தொடங்கியுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளோம். 
அதே வேளையில் புயலால் மரங்கள் சாய்ந்து வேலைவாய்ப்புகளை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவும்,  நிவாரணம் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து சிஐடியூ தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் எம். வல்சகுமார் கூறியதாவது:
மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மீண்டும்  பால்வடிப்புத் தொடங்கும்.   பால்வடிப்புத் தொடங்கும் போது தொழிலாளர்களுக்கு ஊதியமும் உயர்த்தப்படும்.  அதே வேளையில் கடந்த சில ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தப்படாத நிலை காணப்படுகிறது. 
தோட்ட நிர்வாகங்கள் ரப்பர் விலையை காரணம் காட்டி ஊதியத்தை உயர்த்த மறுக்கின்றன.  தற்போது நிறுவனங்களாக செயல்படும் தோட்டங்களில் 320 முதல் 400 மரங்கள் வரை பால்வடிப்பு செய்வதற்கு பஞ்சப்படி உள்பட  ரூ. 410 ஊதியம் வழங்கப்படுகிறது.  அதே வேளையில் சிறு தோட்டங்களில் இதை விட குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது.
அரசு ரப்பர் கழகத்தில் 2016 நவம்பர் 30 ஆம் தேதியுடன் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.  பல கட்டப் பேச்சுகள் நடத்தப்பட்ட பிறகும், தமிழக முதல்வரை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்திய பின்னரும் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.  இதனால் ரப்பர் கழகத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
ஒக்கிப் புயல் காரணமாக ரப்பர் கழகத்தில் கீரிப்பாறை, மணலோடை கோட்டங்களில் ஏராளமான மரங்கள் முறிந்த நிலையில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுபோன்று  தனியார் தோட்டங்களில் புயல் பாதிப்புகளால் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.  இதை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் அல்லது மாற்று வேலைகள் வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.