சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலும் ஒன்றாகும். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இருந்து 12 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் கடவுள்களும் ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்துள்ளதால் இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.
முப்பெரும் கடவுளை வணங்குவதற்காக இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். 5,400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலின் முகப்பில் 7 அடுக்குகளுடன் 133 அடி உயரத்தில் ஏராளமான சிற்பங்களை கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்ததும் முதலில் தட்சிணாமூர்த்தி சன்னதியும், அதைத்தொடர்ந்து கொன்றையடி, மாக்காளை, இசைத்தூண்கள், நவக்கிரக மண்டபம், நீலகண்டவிநாயகர், தாணுமாலயசாமி சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதி, நடராஜ மூர்த்தி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, அறம்வளர்த்த அம்மன் சன்னதி, சித்திரசபை, கைலாசநாதர் சன்னதி, அலங்கார மண்டபம், செண்பகராமன் மண்டபம், சுற்றுப்பிரகார மண்டபம், ராமர் சன்னதி உள்பட பல்வேறு சன்னதிகளும், முடிவில் இந்திர விநாயகர் சன்னதியும் உள்ளன.
இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை விக்னேஷ்வரி என அழைக்கிறார்கள். மேலும் இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.
18 அடி உயர ஆஞ்சநேயர்: இக்கோயில் மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. 18 அடி உயரமுடைய இந்தச் சிலை 1929 -ஆம் ஆண்டில் ராமபிரானின் கருவறைக்கு எதிரில் இருக்குமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆஞ்சநேயர் ஜயந்தி அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள்.
கோயில் தல வரலாறு: அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார். அப்போது சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுளர்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், "ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் அதை உண்ணல் ஆகாது' என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர்.
பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள். தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளர்களுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசுயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோயில் கட்டப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
கும்பாபிஷேகம்: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இக்கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் உடனடியாக கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுசீந்திரத்தைச் சேர்ந்த பக்தர் கணேசன் கூறியது: மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் தாமதமாகியுள்ளது பக்தர்களிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆவணிப் பெருந்திருவிழா 9 நாள்களும், மார்கழித் திருவாதிரைத் திருவிழா 10 நாள்களும், மாசி திருக்கல்யாணத் திருவிழா 9 நாள்களும் நடைபெறும். கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இத்திருவிழாக்கள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எனவே, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்பது பக்தர்களின் விருப்பமாகும் என்றார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி கூறியது: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தொல்பொருள் துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர்களிடமிருந்து பதில் கிடைத்ததும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும் . இதையடுத்து அரசின் அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தொடங்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு தனித்தீர்மானம்: தமிழக எம்.பி., எம்எல்ஏக்கள் மத்திய அரசிடம் நேரில் வழங்க வேண்டும்

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்!

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


