உணவுக் குழாய், இரைப்பை, குடல் அறுவை சிகிச்சையில்ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை சாதனை

உணவுக் குழாய்,  இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
Published on

உணவுக் குழாய்,  இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை டீன் சோமசேகர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை துறை கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு ஆசிட் போன்ற திரவத்தை குடித்ததால் உணவு அருந்த முடியாத நிலையில் இருந்த பலர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இத்துறையின் சிறந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் பரிசோதனை செய்ததில், உணவுக் குழாய் முழுவதும் சுருக்கம் ஏற்பட்டு முழு அடைப்பு ஏற்பட்டிருந்தது கண்டறிப்பட்டது.  இத்தகைய நோயாளிகளுக்கு  அறுவை சிகிச்சை தவிர வேறு சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாது.
இந்நிலையில், அவர்களுக்கு பெருங்குடலை உணவுக் குழாய்க்கு பதிலாக அமைத்து  உணவு உண்பதற்கு இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மூலம் வழி செய்யப்பட்டது. உமிழ்நீர்கூட விழுங்க முடியாத நிலையில் இருந்த நிலை மாறி தற்போது அனைத்து உணவுகளையும் உட்கொள்வதற்கு இந்த அறுவை சிகிச்சை பயனுள்ளதாக உள்ளது.
கடந்த 10 ஆ'ண்டுகளில் இந்த மருத்துவமனையில் இத்துறையின் மூலம், நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உணவுக் குழாய் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சிக்கலான மற்றும் நுண்ணிய அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சைக்கு 4 மணி முதல் 7  மணி நேரம் வரை ஆகும். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ரூ. 3 லட்சம் செலவாகும்.   ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், இருப்பிட மருத்துவர்  ஆறுமுகவேலன், துணை இருப்பிட மருத்துவர் கலைகுமார்,  இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை துறை நிபுணர்கள்  ஆண்டன்பெட்ரி, பிரபாகரன், ஜான்கிரிப்ஸன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com