பொது மயானப் பகுதியில் தனியார் உரிமை கோரும் நிலத்தை மீட்க வந்த நீதிமன்ற கமிஷன்: பொதுமக்கள் எதிர்ப்பு

குலசேகரம் அருகே பொது மயானப் பகுதியில் தனியாரின் சொத்தை கையகப்படுத்த நீதிமன்ற ஆணையர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
1 min read

குலசேகரம் அருகே பொது மயானப் பகுதியில் தனியாரின் சொத்தை கையகப்படுத்த நீதிமன்ற ஆணையர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திற்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட தும்பகோடு- அலெக்சாண்டர்புரம் சுண்ணாம்புகளம் பகுதியில் அரசுப் புறம்போக்கு நிலம் சுமார் 70 சென்ட் உள்ளது. இந்த நிலத்தை  குலசேகரம்,  திற்பரப்பு,  பொன்மனை பகுதிகளைச் சேர்ந்தோர் பொதுமயானமாக பயன்படுத்தி வருகின்றனர். 
இந்த மயானத்தையொட்டி தனக்கு 25 சென்ட் பட்டா நிலம் இருப்பதாகவும், அந்த நிலத்தையும் சேர்த்து பேரூராட்சி நிர்வாகம் சுற்றுச்சுவர் கட்டி வைத்துள்ளதாகவும்,  தும்பகோடு பகுதியைச் சேர்ந்த ரெவிகுமார் பத்மநாபபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் ரெவிகுமாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததுடன், அந்த நிலத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர்களை இடித்து நிலத்தை அவரிடம் ஒப்படைக்கும் வகையில் வழக்குரைஞர் கமிஷனாக அஜித்குமாரை  நியமித்து அண்மையில்  உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை காலையில் வழக்குரைஞர் கமிஷன் மற்றும் கல்குளம் வட்ட நில அளவையர் பாமா உள்ளிட்டோர் நிலத்தை வரையறை செய்து வழங்கும் வகையில் சம்பவ இடத்துக்கு வந்தனர். 
தகவலறிந்த திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் தலைவர் ஸ்டாலின் தாஸ், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் அலெக்சாண்டர்,  பால்தங்கம், குலசேகரம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சுபாஷ் கென்னடி உள்பட திரளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். 
பேரூராட்சி செயல் அலுவலர் ரெமா தேவி பேரூராட்சி சார்பிலான ஆவணங்களை வழக்குரைஞர் கமிஷனிடம் காண்பித்தார். தொடர்ந்து நில அளவையர் அளவீடு பணியைத் தொடங்கினார். காலையில் தொடங்கிய பணி பிற்பகல் வரை நீடித்தது. வழக்கு தொடர்ந்த ரெவிகுமாருக்கு  25 சென்ட் நிலம் இருப்பதாக நில அளவையர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு அங்கு திரண்டிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மதிற்சுவர்களை இடிக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இந்நிலையில் மதிற்சுவர்களை இடித்து அப்புறப்படுத்தாமல் அவற்றை உள்ளடக்கி 25 சென்ட் நிலத்தை அளவீடு செய்து ரெவிகுமாரிடம் வழக்குரைஞர் கமிஷன் ஒப்படைத்தது. இதையடுத்து ரெவிகுமார் அப்பகுதியில் முள்வேலி அமைத்து நிலத்தை கைவசப்படுத்தினார். 
இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட்  மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான ஸ்டாலின் தாஸ் கூறியது: இப்பகுதியில் கடந்த 2005ஆம் ஆண்டு அப்போதைய பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜே. ஹேமச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்த நிலம் தொடர்பாக தனி நபர்   தொடர்ந்த வழக்கை பேரூராட்சி நிர்வாகம் சரியான வகையில் நடத்தவில்லை. இதனால் வழக்கின் தீர்ப்பு தனி நபருக்கு ஆதரவாக அமைந்தது. நீதிமன்றத்தில் வழக்கை சரியாக நடத்தாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து,  பேரூராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை (பிப். 6) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com