வடிவீசுவரம் அழகம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

நாகர்கோவில் வடிவீசுவரம் அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம் புதன்கிழமை  நடைபெற்றது.
Updated on
1 min read

நாகர்கோவில் வடிவீசுவரம் அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம் புதன்கிழமை  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருந்திருவிழா 10 நாள்கள்  வெகு விமரிசையாக நடைபெறும். 
நிகழாண்டுத் திருவிழா கடந்த பிப். 20  ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
விழாவில்,  தொடர்ந்து  ஒவ்வொரு நாளும்,  சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனம்,  காமதேனு வாகனம்,  இந்திர வாகனம், யானை வாகனம்,  வெள்ளிப் பல்லக்கு, வெள்ளி கைலாச பர்வத வாகனம்,  வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 9 ஆம் திருவிழாவான பிப்.28 ஆம் தேதி புதன்கிழமை  நடைபெற்றது.  இதை முன்னிட்டு  அதிகாலை 5  மணிக்கு சுப்பிரமணியசுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் தடம் பார்க்க எழுந்தருளினார்.   பின்னர் காலை 9 மணிக்கு பெரிய தேரில் அழகம்மனும்,  சுந்தரேஸ்வரரும், விநாயகர் தேரில் பிள்ளையாரும் எழுந்தருளினர்.   தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
குமரி மாவட்ட அதிமுக செயலர் அ.விஜயகுமார் எம்.பி. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.  இதில்,  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி,  உதவி ஆணையர் ரத்தினவேல்,  ஜெயந்திநாதன்,  கோயில் ஸ்ரீ காரியம் ரமேஷ்,  ராஜ்குமார், ஜீவானந்தம்,   மாவட்ட வள்ளலார் பேரவைத் தலைவர் பத்மேந்திராசுவாமிகள், மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் சகாயம்,  நாகர்கோவில் நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சீனு, கோபாலசுப்பிரமணியம், ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், தொழிற்சங்கத் தலைவர் காரவிளை செல்வன்  உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து விநாயகர் தேரை சிறுவர்களும், சுவாமி,அம்பாள் தேரை பெண்களும் இழுத்தனர். வடிவீசுவரம் கீழரதவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, பெரியதெரு,  வழியாக தேர் மீண்டும் நிலையை அடைந்தது. 
மாலை 5.30 மணிக்கு சமயச்சொற்பொழிவும்,  6.30  மணிக்கு வடிவீசுவரம் சாந்தாசுப்பிரமணி, சலஜாமணி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு வீணை இசைச்சங்கமமும் நடைபெற்றது.
இரவு 9 மணிக்கு தேரடி திடலில் சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சப்தாவர்ண நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்ச் 1  ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4  மணிக்கு சுவாமியும், அம்பாளும் ஆறாட்டுத்துறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,  இரவு 8  மணிக்கு சுவாமியும்,  அம்பாளும் ஆறாட்டுத்துறையிலிருந்து மேளதாளங்களுடன் பவனி வருதலும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com