கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொடங்கி கோவளம் வரை அமைந்துள்ள பண்டைய திருவிதாங்கூர் அரசின் தடுப்பு அரண்களின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அவை பாதுகாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்தபோது, நாட்டின் கிழக்கு எல்லையில் எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியான கடுக்கரை முதல் ஆரல்வாய்மொழி, மருந்துவாழ்மலை, பரமார்த்தலிங்கபுரம் வழியாக கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடற்கரை வரையான 20 கி.மீ. தொலைவுக்கு தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. இதை திருவிதாங்கூர் அரண் என ஐரோப்பியர்கள் தங்கள் ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு பருவமழை முடிவிலும் மதுரை ஆட்சியாளர்களின் படைகள் திருவிதாங்கூர் பகுதிக்குள் நுழைந்து நாஞ்சில் நாட்டை கொள்ளையடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், அதை தடுப்பதற்காகவே இந்த தடுப்பு அரணை கட்டியுள்ளனர். கி.பி. 1729 இல் மார்த்தாண்டவர்மா திருவிதாங்கூரின் அதிகாரத்துக்கு வந்த பிறகு இந்த அரணானது ஐரோப்பிய ராணுவ பணியாளர்கள் உதவியுடன் பலப்படுத்தப்பட்டது.
இந்த அரண்களின் இடையிடையே பீரங்கிகளை நிறுவுவதற்கான கொத்தளங்கள் கருங்கற்களால் எழுப்பப்பட்டிருக்கின்றன. அரணின் சுவரானது வெட்டுக்கற்கள் மற்றும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. இந்த அரண் கட்டப்பட்ட நேரத்தில் கன்னியாகுமரி, திருவிதாங்கூர் எல்லைக்குள் இல்லை. எனவேதான், திருவிதாங்கூரின் எல்லையாக இருந்த கோவளம் வரை இந்த நெடுஞ்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. கி.பி. 1765-இல் மதுரை ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி, ஆங்கிலேயர்களின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையால் திருவிதாங்கூருக்கு மாறியது.
தென்தமிழகம் முழுமையாக ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, திருவிதாங்கூருக்கு எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் போனதால், இந்த அரணும் பயன்பாடு இல்லாமல் போனது. கி.பி. 1741-இல் டச்சு கிழக்கிந்தியப் படையை குளச்சலில் நடைபெற்ற யுத்தத்தில் திருவிதாங்கூர் படைகள் தோற்கடித்த வரலாற்றில் இந்த அரண் முக்கியப் பங்காற்றியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து கேப்டன் ஹாக்கர்ட் தலைமையிலான படைப்பிரிவினர் குளச்சலை நோக்கிப் புறப்பட்டபோது திருவிதாங்கூர் அரண்களை கடந்து செல்லவேண்டியிருந்தது. அரணில் அணிவகுத்து நின்ற திருவிதாங்கூர் வீரர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் டச்சுப்படையினர் திரும்பிச் சென்றனர். இந்தத் தோல்விக்கு கேப்டன் ஹாக்கர்டின் பொறுப்பின்மையே காரணம் என குற்றம்சாட்டிய டச்சுக் கம்பெனி, அவரை இந்தோனேசியாவுக்கு நாடுகடத்தி தனிமைச் சிறையில் அடைத்து வைத்தது. இந்த விவரங்கள் அனைத்தும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்க் டி லனாய் என்னும் வரலாற்று நூலாசிரியர் எழுதிய "தி குலசேகர பெருமாள்ஸ் ஆப் திருவிதாங்கூர் 1671-1758' என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அரண்கள், காலப்போக்கில் பலவீனமடைந்து சிதிலமடைந்துவிட்டன. அரணுக்குள் இருந்த கருங்கற்கள் கட்டுமானப் பணிகளுக்காக திருடப்பட்டுவிட்டன. தற்போது பரமார்த்தலிங்கபுரம், கோவளம் பகுதியில் இந்த அரணின் எஞ்சிய சுவடுகள் உள்ளன. இந்த அரண் குறித்த விவரங்கள் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கே தெரியவில்லை.
இதுகுறித்து அம்மாண்டிவிளையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் என்.டி. தினகர் கூறியது: திருவிதாங்கூர் ஆட்சியாளர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த பாதுகாப்பு அரண்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. தற்போது இந்த அரண்கள் கன்னியாகுமரியை அடுத்த பரமார்த்தலிங்கபுரம் மற்றும் கோவளம் கடற்கரைப் பகுதிகளில் நீண்ட சுவர்களாகக் காணப்படுகின்றன. தமிழகத்தின் எந்த குறுநில அரசின் எல்லையிலும் இத்தகையதொரு அரண்கள் எழுப்பப்படவில்லை. எனவே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரண்களின் எஞ்சிய சுவடுகளைப் பாதுகாத்து இதன் வரலாற்றை இளைய தலைமுறையினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் அரண்களைச் சுற்றிலும் இரும்புக் கம்பிகள் அமைத்து பாதுகாப்பதுடன், அறிவிப்பு பலகை வைத்து இதன் வரலாற்றை எழுதிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இல்லை..! இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்ப்பு!

முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு!

மஹிந்திரா & மஹிந்திரா 4வது காலாண்டு லாபம் 48.5% உயர்வு!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

