புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் குமரி மாவட்டத்தில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தம் செய்தனர். மேலும், 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1132 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; தொகுப்பூதியத்தில் பணி புரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்துக்குப் பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ ஜியோ) செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். தமிழகம் முழுவதும் புதன்கிழமை அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.ராஜ்குமார், ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சி.எம்.ஐவின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பகவதியப்ப பிள்ளை, தியாகராஜன், சிவஸ்ரீ ரமேஷ், வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோலப்பன், செயலாளர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை மாநிலத் துணைத்தலைவர் சுமதி மற்றும் நிர்வாகிகள் கிறிஸ்டோபர், நாகராஜன், வேலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, ஜாக்டோ- ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் எட்வின் பிரகாஷ், விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.இதைத் தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 375 பெண்கள் உள்ளிட்ட 510 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தக்கலை: வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கல்குளம் வட்டச் செயலர் ராமகிருஷ்ணன், ஜான்கென்னடி ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் மரியமிக்கேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்- அலுவலர் சங்க மாநில பொதுச்செயலர் கனகராஜ் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி கார்த்திகேயன் பேச்சு நடத்தியும் பலனளிக்காததால் 236 பெண்கள் உள்பட 288 பேரை போலீஸார் கைது செய்தனர்.
களியக்காவிளை: குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் தலைமை ஆசிரியர்கள் கழக மாநிலச் செயலர் ஜோஸ் பென்சிகர் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில், 225 பெண்கள் உள்பட மொத்தம் 334 பேரை களியக்காவிளை போலீஸார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் முழுவதும் 3 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 1132 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









