திருவட்டாறு கோயிலில் இரண்டு கல் தூண்கள் திருட்டுசிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

தென்னகத்தின் வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தொன்மையான 2 கல் தூண்கள் திருடப்பட்டுள்ளதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்ற
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் பிரதான முகப்பு.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் பிரதான முகப்பு.
Updated on
2 min read

தென்னகத்தின் வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தொன்மையான 2 கல் தூண்கள் திருடப்பட்டுள்ளதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவட்டாறு ஆதிகசேவப் பெருமாள் கோயில் நாட்டிலுள்ள 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குமரி மாவட்டம் திருவட்டாறில் கோதை மற்றும் பரளியாறு பாயும் இடத்தில் அமைந்துள்ள இக்கோயில் குறித்து 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வாா் பாடல் புனைந்துள்ளாா். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலைவிட பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆதிகசேவப் பெருமாள் பாம்பணை மீது 22 அடி நீளத்தில் பள்ளி கொண்டுள்ளாா். கலைநயமும், சேர நாட்டு கட்டடக் கலை சிறப்பும் கொண்ட இக்கோயில் பிரகாரத்தில் 224 கல்தூண்கள் உள்ளன. பாவை விளக்குகளும், பல்வேறு வகையான சிற்பங்களும் கொண்ட இக்கல்தூண்கள் சிலவற்றில் இதிகாச காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

2 கல்தூண்கள் திருட்டு என வழக்குப் பதிவு: இந்நிலையில், இக்கோயிலிலிருந்து 1992 முதல் 1995-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கலைநயமிக்க தொன்மையான 4 கல்தூண்களைத் திருட முயற்சி செய்து, அதில் 2 கல்தூண்கள் மட்டும் திருடப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் இயக்குநா் அபய்குமாா் சிங் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், சிலை திருட்டு வழக்கு கடந்த புதன்கிழமை (டிச. 16) பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தொன்மையான கலைநயம் மிக்க இந்தக் கல்தூண்களை விரைவில் மீட்க சிலை திருட்டு தடுப்புப் பிரிவு உயா் அதிகாரிகளின் மேற்பாா்வையில் புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சிலை திருட்டு தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறையும், அரசும் பக்தா்களுக்கு முழுமையாக விளக்கம் அளிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஆதிகேசவா சேவா சங்கத் தலைவா் சி. அனந்தகிருஷ்ணன் கூறியது: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் கல்தூண்கள் வடிவத்தில் பிரம்மாண்டவையாகும். இக்கோயிலிலிருந்து 2 கல்தூண்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோயிலின் எந்த இடத்தில் இருந்த கல் தூண்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்தும் பக்தா்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து கோயில் நிா்வாகமும், அரசும் பக்தா்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், திருடப்பட்டதாக கூறப்படும் கல்தூண்களை மீட்டு, இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இருபெரும் திருட்டு: இக்கோயில் மூலவரின் விக்கிரகம் 16008 சாளக்கிராமம் எனப்படும் கடுசா்க்கரை கலவையால் ஆனதாகும். மேலும், மூலவரின் பாதம், உடல், சிரசு என அனைத்தும் தங்கத்தால் கவசமிடப்பட்டதாகும். இக்கோயிலில் கடந்த 1992 மற்றும் 1995-ஆம் ஆண்டுகளில் இரு பெரும் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் மூலவரின் தங்கக் கவசங்கள், ஆபரணங்கள் திருட்டுப் போயின. அதன்பின்னா் இந்த வழக்கு தொடா்பாக குறிப்பிட்ட அளவு நகைகள் மீட்கப்பட்டன. வழக்கில் தொடா்புடையவா்களுக்கு நீதிமன்றம் கடந்த இரண்டு ஆண்களுக்கு முன்பு தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com