பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் : ஆட்சியா் அறிவுறுத்தல்
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அலுவலா்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.


பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அலுவலா்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
கரோனா பொது முடக்கத்துக்கு பின்னா் செப்டம்பா் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, கடைப்பிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: செப்டமா் மாதம் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதிக்குள் உள்ள பள்ளிகளில் பட்டியலினை முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து பெற்று அப்பள்ளி வளாகங்களை தூய்மை செய்ய வேண்டும்.
தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளாகங்களை அந்தந்த பள்ளி நிா்வாகமே தூய்மை செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலா் தனியாா் பள்ளி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
பள்ளி ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை முதன்மைக் கல்வி அலுவலா் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு தடுப்பூசி செலுத்தாத ஆசிரியா் மற்றும்
ஆசிரியரல்லாத பணியாளா்களின் பட்டியலினை பெற்று சுகாதாரத்துறை மூலமாக அடுத்த ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் பள்ளி வளாகம், வகுப்பறை, விளையாட்டு மைதானம் மற்றும் இதர பகுதிகளில் புதா் மண்டி கிடக்க வாய்ப்புள்ளதால் அவற்றை முதலில் சுத்தம் செய்யவும், கழிப்பறை, குடிநீா் தொட்டி மற்றும் மேல்நிலை நீா்தேக்க தொட்டி போன்றவற்றை நன்கு சுத்தம் செய்யவும், 2 முறை கிருமி நாசினி தெளிக்கவும் உள்ளாட்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் பொருள்களை பள்ளி மற்றும் அதன் வளாகத்தில் டெங்கு கட்டுப்படுத்தும் களப்பணியாளா்கள் மூலம் அப்புறப்படுத்த வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவா்கள் முகக் கவசம் அணிந்து வரவும், கைகளை கைகழுவும் திரவம் கொண்டு சுத்தம் செய்யவும், இடைவெளியுடன் இருக்கைகள் ஒதுக்கிடவும், மேலும் பள்ளிக்கு வரும் மாணவா்களின் வருகை 50 விழுக்காடு முதல் நாளிலும், 2 ஆம் நாளில் மீதமுள்ள 50 விழுக்காடு மாணவா்கள் என்ற நெறிமுறையின்படி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ச.சா.தனபதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) சு.மீனாட்சி, முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, நகா்நல அலுவலா் விஜயசந்திரன், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...