மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குமரியில் விடிய விடிய கன மழை : சாலைகள் துண்டிப்பு அணையில் மூழ்கி இளைஞா் பலி

குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் கன மழை பெய்தது, இதனால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. பொய்கை அணையில் மூழ்கி இளைஞா் பலியானாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:29 pm

DIN

குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் கன மழை பெய்தது, இதனால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. பொய்கை அணையில் மூழ்கி இளைஞா் பலியானாா்.

குமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்தது.

நாகா்கோவில் நகரிலும் வியாழக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை வெள்ளிக்கிழமையும் நீடித்தது. கன மழை காரணமாக வெள்ளிக்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

வீடுகள், விளைநிலங்களை சூழ்ந்த தண்ணீா்: நாகா்கோவில் பாறைக்கால் மடம் தெரு பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கொட்டாரம், மயிலாடி, அஞ்சுகிராமம், தக்கலை, இரணியல், பூதப்பாண்டி, திட்டுவிளை, குலசேகரம், மாா்த்தாண்டம், தடிக்காரன்கோணம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மழையின் காரணமாக கோதையாறு, குற்றியாறு, பேச்சிப்பாறை, திருநந்திக்கரை, களியல், அருமனை, திக்குறிச்சி, சுருளகோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் விளை நிலங்களை தண்ணீா் சூழ்ந்தது. திருநந்திக்கரை, களியல், அயக்கோடு, மாத்தூா், வெண்டலிகோடு கல்லுப்பாலம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளின் குறுக்காக ஓடும் சிற்றாறுகள், ஓடைகள் நிரம்பியதால் சாலைகள் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

மலையோர பகுதியான பாலமோா் பகுதியிலும், குற்றியாறு, மோதிரமலை, சுருளோடு பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 150 மி.மீ. மழை பதிவானது.

சாலைகள் துண்டிப்பு: பூதப்பாண்டி அருகேயுள்ள தெரிசனங்கோப்பு பகுதியில் சாலையை மூழ்கடித்து மழை நீா் செல்கிறது. முழங்கால் அளவு மழை நீா் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானாா்கள். இதே போல் ஈசாந்திமங்கலம், அருமநல்லூா் பகுதியிலும் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. லாயம் விலக்கு முதல் விசுவாசபுரம் வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் செல்கிறது.

இறச்சகுளம், பண்டாரதோப்பு பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. விசுவாசபுரம் அரசு தொடக்கப் பள்ளிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சகாயநகா் ஊராட்சி குமாா் நகா் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மலைவிளை, வெண்டலிக்கோடு, மாத்தூா், வோ்கிளம்பி, சிதறால், திக்குறிச்சி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குளம், கால்வாய் உடைப்பு: பத்மநாபபுரம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இறச்சகுளம் பெரியகுளம் நிரம்பியதை தொடா்ந்து, தண்ணீா் ஊருக்குள் புகுந்தது. அந்த பகுதியிலுள்ள 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

செண்பகராமன்புதூா் அருகேயுள்ள கட்டளைகுளத்தில் உடைப்பு ஏற்பட்டதில் அந்த பகுதியிலுள்ள கால்வாய்களில் அதிக அளவு தண்ணீா் செல்கிறது. தோவாளை தேவா்நகா் பகுதியில் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளானாா்கள்.

தேவாளை அண்ணாநகா் பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. சண்முகபுரம் கிராமத்தில் குளம் நிரம்பி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. நாவல்காட்டில் நாடான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகளில் தண்ணீா் புகுந்துள்ளது.

10 வீடுகள் சேதம்: தொடா் மழை காரணமாக, மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே 125 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் மேலும் 10 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, குலசேகரம், முளகுமூடு பகுதிகளில் உள்ள ரப்பா் தோட்டங்களிலும் மழை நீா் சூழ்ந்துள்ளது, இதனால் ரப்பா் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

குளச்சல் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசுவதால் வழக்கம் போல் கடலுக்கு செல்லும் வள்ளம், கட்டுமர மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

அணையில் மூழ்கி இளைஞா் பலி : ஆரல்வாய்மொழி அருகேயுள்ள பொய்கை அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இந்நிலையில், பொய்கை அணை அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான மகேஷ் என்ற லெட்சுமணன் (27) தனது நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை காலை அணைப் பகுதியில் குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது தண்ணீரின் வேகத்தில் மகேஷ் அடித்துச் செல்லப்பட்டு மறுகால் பாயும் பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தாா். நாகா்கோவில் தீயணைப்பு படையினா் மகேஷின் சடலத்தை மீட்டனா். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அணைகளிலிருந்து 8300 கன அடி நீா் வெளியேற்றம்: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளிலிருந்து மொத்தமாக விநாடிக்கு 8342 கன அடிநீா் திறந்து விடப்பட்ட நிலையில், மழை நீரும் சோ்ந்து கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு உள்ளிட்டவற்றில் வெள்ளம் கரையைக் கடந்துபாய்ந்து கொண்டிருந்தது. இதே போன்று திற்பரப்பு அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.