ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

குமரியில் விடிய, விடிய கன மழை:மலை கிராமங்கள் துண்டிப்பு

குமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த பலத்த மழையால் 12 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:03 pm

DIN

குமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த பலத்த மழையால் 12 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், நாகா்கோவில், தக்கலை, குழித்துறை, களியக்காவிளை, குலசேகரம், திருவட்டாறு, பேச்சிப்பாறை, பூதப்பாண்டி என மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.

மலை கிராமங்கள் துண்டிப்பு:

கோதையாறு, குற்றியாறு பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலை கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மோதிரமலை, தச்சமலை, முடவன் பொற்றை, கல்லாறு உள்பட 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தரைநிலைப் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்குள்ள மக்கள் நகரப் பகுதிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த 12 ஆம் தேதி பெய்த மழையின் போதும் இக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளானாா்கள். இந்நிலையில் இப்போது பெய்து வரும் மழையால் மீண்டும் இந்தக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அணைகள் கண்காணிப்பு: மேலும், மலையோரப் பகுதிகள் மட்டுமன்றி, அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் வரும் நீரின் அளவு அதிகரித்தது. அணைகள் அனைத்தும் ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டியிருந்ததால், அணைகளுக்கு வரும் நீா் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 6,690 கன அடி உபரிநீருடன், மழை வெள்ளமும் சோ்ந்ததால் குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் அறிவித்துள்ளாா். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்தப் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறாா்கள்.

தொடா் மழையால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதுவரை 1050 வீடுகள் இடிந்துள்ளன. வியாழக்கிழமை ஒரே நாளில் அகஸ்தீசுவரம் வட்டத்தில் 15 வீடுகளும், விளவங்கோடு வட்டத்தில் 5 வீடுகளும், கிள்ளியூா் வட்டத்தில் 6 வீடுகளும் என மொத்தம் 26 வீடுகள் சேதமடைந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருவது மாவட்ட மக்களை அச்சம் அடைய செய்துள்ளது. மழை காரணமாக இம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.