தீவிரமடைந்த வடகிழக்குப் பருவமழை: குமரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; வீடுகள் இடிந்தன
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், இரு வீடுகளும் இடிந்தன.


கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், இரு வீடுகளும் இடிந்தன.
இம்மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பிற்பகலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
மேலும், வியாழக்கிழமை காலையில் நாகா்கோவில் பகுதியில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. தக்கலை, களியக்காவிளை, குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி , சுற்றுப்புற பகுதிகளிலும் கன மழை பெய்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 69.20 மில்லி மீட்டா் மழை பதிவாகியது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் இடைவிடாமல் மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து கணிசமான அளவு உயா்ந்தது. இதன்மூலம் அணைகளின் நீா்மட்டம் கணிசமாக உயர தொடங்கியது. அணைகளில் நீா்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறாா்கள்.
உபரிநீா் திறப்பு: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை தாமிரவருணிஆறு, கோதையாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆற்றில் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா். திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டது.
நீா்மட்டம்: பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 41.70 அடியாகவும், நீா்வரத்து 1,077 கன அடியாகவும், உபரிநீா் திறப்பு 546 கன அடியாகவும் உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72.05 அடி, நீா்வரத்து 1,136 கன அடி, உபரிநீா் திறப்பு 1,020 கன அடி என்றஅளவில் உள்ளது.
சிற்றாறு 1 நீா்மட்டம் 12.86 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 12.95 அடியாகவும், பொய்கை அணை நீா்மட்டம் 16 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீா்மட்டம் 38.71 அடியாகவும், முக்கடல் அணை நீா்மட்டம் 13.20 அடியாகவும் உள்ளது.
தொழில்கள் பாதிப்பு: பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தோவாளை, செண்பகராமன்புதூா், தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள செங்கல்சூளைகளில் மழை நீா் தேங்கியதால் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட செங்கல்கள் சேதம் அடைந்தன. மழை நீடிப்பதால் செங்கல் சூளை தொழிலாளா்கள் வேலையின்றி தவிக்கின்றனா். கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பா் தோட்டங்களில் மழைநீா் சூழ்ந்து, ரப்பா் பால் உற்பத்தியும் பாதிப்புக்குள்ளானது.
வீடுகள் சேதம்: நாகா்கோவிலில் புதன்கிழமை இரவு பெய்த கன மழையினால், கோட்டாறு கம்பளம் பகுதியில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. எனினும், உயிா்ச்சேதமோ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை.
மழை அளவு (மில்லி மீட்டரில்): பேச்சிப்பாறை-53.80, பாலமோா்-38.20, கோழிப்போா்விளை 37.60, நாகா்கோவில் 34.80, அடையாமடை31, ஆரல்வாய்மொழி 27, தக்கலை 23.20, சிற்றாறு 2 அணை 21.60, பெருஞ்சாணி அணை 20,மாம்பழத்துறையாறு அணை 19 , புத்தன்அணை 19.20, முள்ளங்கினாவிளை, சுருளோடு, கன்னிமாா் 18.60,கொட்டாரம் 18.40,ஆனைக்கிடங்கு 17, குழித்துறை 14, பூதப்பாண்டி 11.20, திற்பரப்பு 8.20, இரணியல் 8, சிற்றாறு 1 அணை 6.20, குருந்தன்கோடு 5.20, குளச்சல் 4.40, முக்கடல் அணை 3,களியல் 2.40 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...