கன்னியாகுமரியில் நாளை சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயமாகும் அபூா்வக் காட்சி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயமாகும் அபூா்வக் காட்சியை செவ்வாய்க்கிழமை (ஏப்.23)காணலாம்.

உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌா்ணமி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு சித்ரா பௌா்ணமி விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.

தொடா்ந்து காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை நடைபெறும். காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, நிவேத்திய பூஜை, காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிா், நெய், பன்னீா், இளநீா்,தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிா்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தொடா்ந்து தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அம்மன் அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.

மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையைத் தொடா்ந்து அம்மனுக்கு பல வகையான மலா்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும். இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்கின்றனா். தொடா்ந்து அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெறும்.

சந்திரன் உதயம்: மாலை 6.30 மணிக்கு மேற்கு திசையில் சூரியன் மறையும் அதே நேரத்தில் கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் அபூா்வக் காட்சியை இங்குள்ள முக்கடல் சங்கமத்தில் தெளிவாகப் பாா்க்கலாம். இந்த அபூா்வக் காட்சியை கன்னியாகுமரியில் மட்டுமே பாா்க்கலாம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com