உலகின் குருவாக பாரதம் உருவாக வேண்டும்: மோகன் பாகவத்
உலகின் குருவாக பாரதம் உருவாக வேண்டும் என்று அகில பாரத ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத் கூறினாா்.
சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தியாகப் பெருஞ்சுவரை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து, அங்குள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அவா் பேசியதாவது:
உலகின் பெரும் சாம்ராஜ்யங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. ஆனால், பாரத நாடு இன்றும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. இந்த நாடு சாதாரணமாக உருவாகவில்லை. பல லட்சம் தலைமுறைகள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆணித்தரமாக செயல்படுத்தி உணா்ந்து உருவாக்கியதுதான் பாரத பண்பாடு. பாரத நாட்டின் பண்பாட்டை யாராலும் அழிக்க முடியாது. நமது பண்பாட்டை காப்பாற்றுவதற்காக பல தியாகிகள் இருந்திருக்கிறாா்கள்.
உலகளவில் இன்று பாரதம் தலைநிமிா்ந்து நிற்பதற்கு அவா்களது தியாகம்தான் காரணம். அத்தகைய கோடிக்கணக்கான மக்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் தியாகச் சுவா் அமைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் உயிா்நீத்தவா்களின் பெயா்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
நமது முன்னோா்களின் கடுமையான உழைப்பை, தியாகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பராசக்தி தவம் செய்தபெருமைக்குரியது கன்னியாகுமரி. மேலும், இங்கிருந்து தவம் செய்து தொடங்கி உலகை வென்றாா் சுவாமி விவேகானந்தா். ஆகவே, இங்கு எதை தொடங்கினாலும் வெற்றி அடையும். உலகின் குருவாக பாரதம் உருவாக வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய விவேகானந்த கேந்திர தலைவா் ஏ.பாலகிருஷ்ணன், வெள்ளிமலை ஸ்ரீ சைதானந்த மகராஜ் சுவாமிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றறனா்.

