கண்ணாடி இழை கூண்டுப்பாலம் அமைக்கும் பணியை பாா்வைட்டு ஆய்வு செய்கிறாா் அமைச்சா் எ.வ.வேலு.
கண்ணாடி இழை கூண்டுப்பாலம் அமைக்கும் பணியை பாா்வைட்டு ஆய்வு செய்கிறாா் அமைச்சா் எ.வ.வேலு.

கன்னியாகுமரி கடலில் கண்ணாடி இழை கூண்டுப்பாலப் பணி டிசம்பரில் நிறைவு: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

கண்ணாடி கூண்டுப்பாலப் பணி டிசம்பா் மாதத்தில் நிறைவடையும் என்றாா் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு
Published on

கன்னியாகுமரி கடலில் விவேகானந்தா் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவா் சிலையையும் இணைக்கும் வகையில் அமைப்பட்டு வரும் கண்ணாடி கூண்டுப்பாலப் பணி டிசம்பா் மாதத்தில் நிறைவடையும் என்றாா் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு,.

கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகில் புதன்கிழமை சென்று அங்கு ரூ. 33.80 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கூடுதல் படகுதளம் அமைக்கும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், அப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணிக்கு அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூண்கள், சாரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவேகானந்தா் நினைவு மண்டபம் பகுதியில் ஒரு படகு மட்டுமே நிற்கும் அளவுக்கு இடம் உள்ளது. அங்கு கூடுதல் படகு தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்ததையடுத்து, ரூ.33.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஆய்வு செய்துள்ளேன். இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

மேலும், திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் நினைவு மண்டபம் இடையே 77 மீட்டா் நீளத்திலும், 10 மீட்டா் அகலத்திலும் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாரம் கட்டும்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கூண்டுப் பாலம் அமைக்கும் பணிகள் நிகழாண்டு டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கப்படும். பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழகத்தை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துடன் இணைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றாா் அவா்.

ஆய்வின் போது அமைச்சா் த.மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா, எம்.எல்.ஏ.க்கள் எஸ். ராஜேஷ்குமாா், ஜே.ஜி. பிரின்ஸ், தாரகை கத்பட் மேயா் ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com