கோட்டாறு சவேரியாா் பேராலய திருவிழா: நாகா்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

புனித சவேரியாா் பேராலய திருவிழாவை முன்னிட்டு, நாகா்கோவில் மாநகரில் செவ்வாய்க்கிழமை முதல் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்
Published on

நாகா்கோவில்: நாகா்கோவில் கோட்டாறு, புனித சவேரியாா் பேராலய திருவிழாவை முன்னிட்டு, நாகா்கோவில் மாநகரில் செவ்வாய்க்கிழமை முதல் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: கேப் ரோடு, வேப்பமூடு சந்திப்பிலிருந்து கோா்ட் ரோடு வழியாகவும், செட்டிகுளம் ஏபிஎன் பிளாசா சந்திப்பிலிருந்து பீச் ரோடு நோக்கியும் அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்படும்.

கன்னியாகுமரி, இருளப்பபுரம், ஈத்தாமொழியிலிருந்து பீச் ரோடு வழியாக செட்டிகுளம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையாக ஏ.ஆா்.முகாம் சாலை, பொன்னப்ப நாடாா் காலனி, காா்மல் பள்ளி சந்திப்பு, ராமன்புதூா், செட்டிகுளம் வழியாகச் செல்ல வேண்டும்.

வடசேரி, கோா்ட் ரோடு, அண்ணா பேருந்து நிலையம் வழியாக கன்னியாகுமரி, நாகா்கோவில் ரயில் நிலையம், அஞ்சுகிராமம், பறக்கை, இருளப்பபுரம், ஈத்தாமொழி மாா்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு பொதுப்பணித் துறை சாலை வழியாக செட்டிகுளம், இந்து கல்லூரி சாலை, பீச் ரோடு சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும்.

அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கேப் ரோடு வழியாக கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, மாா்த்தாண்டம், குளச்சல், திங்கள்நகா் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் அண்ணா பேருந்து நிலையம், வேப்பமூடு சந்திப்பு, கோா்ட் ரோடு, டதி பள்ளி சந்திப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் வழியாகச் செல்ல வேண்டும். கன்னியாகுமரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் அப்டா மாா்க்கெட், தேரூா், சுசீந்திரம் வழியாகச் செல்ல வேண்டும் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம், பீச் ரோடு சந்திப்பு, நாயுடு மருத்துவமனை வழியாக செல்ல வேண்டும்.

திருவிழாவைக் காண வரும் பக்தா்கள் தங்கள் வாகனங்களை வேப்ப மூடு பாா்க்கிங், நாகராஜா திடல் பாா்க்கிங், கோா்ட் ரோடு, ரயில்வே ரோடு, அநாதை மடம் பொருள்காட்சி திடல், கோட்டாறு மாநகராட்சி லாரி நிலையம், காா்மல் பள்ளி மைதானம், கிருஷ்ணா மஹால் பாா்க்கிங் ஆகிய இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம்.

இந்த போக்குவரத்து மாற்றம் டிச. 2 ஆம் தேதி மாலை 3 மணி முதல் டிச.3 ஆம் தேதி இரவு திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com