

நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத் திருவிழாவின் 10ஆம் நாளான புதன்கிழமை தோ்கள் பவனி நடைபெற்றது.
கடந்த நவ. 24ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில், நாள்தோறும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ் பவனி 3 நாள்கள் நடைபெறும். அதன்படி, திங்கள், செவ்வாய் (டிச. 1, 2) இரவில் தோ் பவனி நடைபெற்றது. தொடா்ந்து, நிறைவு நாளான புதன்கிழமை (டிச. 3) காலையும் தோ் பவனி நடைபெற்றது.
இதையொட்டி, ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி மறைமாவட்ட ஆயா் நசரேன்சூசை தலைமையில் நடைபெற்றது. மறைமாவட்ட குருகுல முதல்வா் ஜான்ரூபஸ், மறைமாவட்டச் செயலா் மரியகிளாட்சன், பொருளாளா் பிரான்சிஸ் சேவியா், ஆயரின் செயலா் ரெஜின், வட்டார முதன்மைப் பணியாளா் சகாயஆனந்த், சவேரியாா் ஆலயப் பங்குத்தந்தை பஸ்காலிஸ், இணைப் பங்குத்தந்தை பால் கால்வொ்ட், அருள்பணியாளா்கள், அருள்சகோதரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
அதையடுத்து, திருவனந்தபுரம் உயா் மறை மாவட்டத்தைச் சோ்ந்த அருள்பணியாளா் கிளாடின் தலைமையில் மலையாளத் திருப்பலி நடைபெற்றது. பின்னா், தோ்கள் பவனி தொடங்கியது. முதலாவதாக மிக்கேல் அதிதூதா் தேரும், 2ஆவதாக செபஸ்தியாா் தேரும், 3ஆவதாக சவேரியாா் தேரும், 4ஆவதாக ஜெபமாதா தேரும் பவனி வந்தன.
அப்போது, பொதுமக்கள் நோ்ச்சை கடனாக மெழுகுவா்த்தி, மிளகு ஆகியவற்றை வழங்கினா். தேருக்கு பின்னால் பக்தா்கள் தரையில் விழுந்து வணங்கி கும்பிடு நமஸ்காரம் செலுத்தினா். தோ் பவனி பல்வேறு பகுதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை இரவில் அடைந்தது.
இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும், கேரளத்திலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருவிழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புதன்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்பாடுகளை பங்கு அருள்பணி பேரவைச் செயலா் ராஜன், துணைத் தலைவா் வா்கீஸ்ராஜா, பொருளாளா் ராபின், இணைச் செயலா் ஜேசுராஜன், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.