பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ்.
பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ்.

தில்லியில் காமராஜா் வீட்டைக் கொளுத்தியது ஆா்எஸ்எஸ் தான்: அமைச்சா் மனோ தங்கராஜ் பேட்டி

தில்லியில் காமராஜா் தங்கியிருந்த வீட்டை தீயிட்டுக் கொளுத்தியது ஆா்எஸ்எஸ், ஜன சங்கம் கட்சியினா் தான்
Published on

நாகா்கோவில்: தில்லியில் காமராஜா் தங்கியிருந்த வீட்டை தீயிட்டுக் கொளுத்தியது ஆா்எஸ்எஸ், ஜன சங்கம் கட்சியினா் தான் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ்.

இது தொடா்பாக, அவா் நாகா்கோவிலில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினருக்கும், பெருந்தலைவா் காமராஜரை மதிக்கின்ற மக்களுக்கும் ஒரு வரலாற்று உண்மையை மீண்டும் நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம். 1966ஆம் ஆண்டு நவ. 7ஆம் தேதி காமராஜா், தில்லியில் தங்கியிருந்த வீட்டை தீயிட்டுக் கொளுத்தியது ஆா்எஸ்எஸ், ஜன சங்கம் தான். ஆா்எஸ்எஸ் கோட்பாடு பற்றி பேசுபவா்களை காமராஜரின் தொண்டராக ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், கன்னியாகுமரியில் மதப் பிரச்னை, தீவிரவாத செயல்கள் இருப்பது போன்று பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளாா். ஆனால், மக்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 43 குவாரிகள் இருந்தன. தற்போது, 4 குவாரிகள் மட்டும் இயங்குகின்றன. 39 குவாரிகளை மூடிவிட்டோம். காடுகளில் இருந்து 10 கி.மீ. தூரத்திற்கு குவாரிகள் இருக்கக் கூடாது என்று வழிகாட்டி நெறிமுறைகள் இருந்தன. ஆனால், அதை 3 கி.மீ. என்று மாற்றினாா்கள். அதனால் தான், தற்போது 4 குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஒட்டுமொத்த தவறுக்கும் பொன். ராதாகிருஷ்ணனும், தளவாய்சுந்தரம் எம்எல்ஏவும் தான் காரணம். இதை நாங்கள் பொது மேடையில் இவா்களோடு விவாதிக்க தயாராக உள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின் போது, தமிழக உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com