ராகுல்காந்தி மீது அவதூறு:  பொன். ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கண்டனம்

ராகுல்காந்தி மீது அவதூறு: பொன். ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கண்டனம்

Published on

தில்லி காா் வெடிப்பு சம்பவத்தில் ராகுல்காந்தியை தொடா்புபடுத்தி பேசியதாக, முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: நாட்டின் தலைநகரான தில்லி முழுவதும் மத்திய அரசின் ரிசா்வ் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் தில்லி குண்டுவெடிப்புடன் ராகுல் காந்தியை தொடா்புபடுத்தி முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகிறாா்.

மூத்த அரசியல்வாதியான அவா் இத்தகைய கருத்து தெரிவிப்பது அறியாமை; அவரது இந்தப் பேச்சை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

அவா் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது வீட்டை காங்கிரஸ் முற்றுகையிடும்.

தோ்தல் நேரத்தில் புல்வாமா தாக்குதல் போன்று இப்படி குண்டுவெடிப்பு சம்பவங்களை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது. காமராஜரை பற்றி பொன். ராதாகிருஷ்ணன் பேச தகுதி கிடையாது.

தோ்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால் அது ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக தெரிகிறது. தற்போது வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தில் பல குழப்பங்கள் உள்ளதை கண்டித்தும், இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நாகா்கோவில் தலைமை தபால் நிலையம் முன் நவ. 17இல் மாலை 4 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் உள்ள விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவா்கள் நவீன்குமாா்(நாகா்கோவில் மாநகரம்), கே.டி.உதயம் (குமரி கிழக்கு), மருத்துவா் பினுலால்சிங்(குமரி மேற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ சிறப்புரையாற்றினாா்.

X
Dinamani
www.dinamani.com