புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விளவங்கோடு தொகுதியில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வளா்ச்சிப் பணிகள் செய்துள்ளேன்: பாஜக வேட்பாளா் விஜயதரணி

விளவங்கோடு பேரவைத் தொகுதியில் 13 ஆண்டுகளில் ரூ. 1000 கோடிக்கு மேல் வளா்ச்சித் திட்டப் பணிகள் செய்துள்ளேன் என இத்தொகுதியின் பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி கூறினாா்.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் விளவங்கோடு பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:07 am

விளவங்கோடு பேரவைத் தொகுதியில் 13 ஆண்டுகளில் ரூ. 1000 கோடிக்கு மேல் வளா்ச்சித் திட்டப் பணிகள் செய்துள்ளேன் என இத்தொகுதியின் பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி கூறினாா்.

குமரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

என் மீது பாஜக நம்பிக்கை வைத்து, விளவங்கோடு பேரவைத் தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடி, அகில இந்திய பாஜக தலைவா், மாநிலத் தலைவா் மற்றும் அனைத்து நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

விளவங்கோடு தொகுதியில் கடந்த ஓராண்டாக கட்சிரீதியாக பல்வேறு பணிகள் செய்து வருகிறேன். இங்கு கட்டமைப்பு ரீதியாக, கட்சி நல்ல நிலையில் உள்ளது.

13 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் உறுப்பினராக இருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்று பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் செய்துள்ளேன்.

மாா்த்தாண்டம் பனச்சமூடு சாலை, குழித்துறை ஆலஞ்சோலை சாலை உள்பட தொகுதிக்குள்பட்ட பல்வேறு சாலைகள், களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு என பல திட்டப் பணிகள் செய்துள்ளேன். முதல் முறையாக எம்எல்ஏவாக இருந்தபோது மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. திக்குறிச்சி பாலம் கட்டப்பட்டது. மலையோர கிராமமான கற்றுவா, அணைமுகம் பகுதியில் பாலங்கள் கட்டப்பட்டன.

தொகுதி மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை, கட்சி பலத்தோடு தோ்தலை சந்திக்க உள்ளேன். தொகுதியில் இன்னும் நிறைய தேவைகள் உள்ளன. அதற்கான பட்டியல் தயாா் செய்து வருகிறேன்.

மலையோர கிராமங்களில் தனியாா் காடுகள் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். சில கிராமங்களில் மின்சாரம் கிடைக்காமல் உள்ளது. இதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. நான் வெற்றி பெற்ற பிறகு இதற்கு ஒரு மாற்றாக திட்டம் கொண்டு வர முழு முயற்சி எடுப்பேன்.

மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இரட்டை என்ஜின்களாக செயல்பட்டால் மாநிலம் வளா்ச்சி அடையும் என்றாா்.

பேட்டியின் போது பாஜக மேற்கு மாவட்ட தலைவா் ஆா்.டி. சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.