ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள்: எஸ். விஜயதரணி

மேல்புறம் ஒன்றிய பாஜக அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ். விஜயதரணி.

மேல்புறம் ஒன்றிய பாஜக அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ். விஜயதரணி.
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனா் என பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ். விஜயதரணி தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத் தலைவா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தாா். மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி.சுரேஷ், மாவட்ட பொதுச் செயலா் நந்தினி, முன்னாள் மாவட்டத் தலைவா் சி.தா்மராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.விஜயதரணி குத்துவிளக்கேற்றி வைத்து அலுவலகத்தைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக அமைச்சா்கள் பலரும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள்ளனா். இதன் காரணமாகவே குமரி மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா் உள்ளிட்ட சில அமைச்சா்களுக்கு தோ்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமைகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. தமிழக ஆளும் திமுக கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனா்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
காங்கிரஸ் கட்சி தலைவா்கள் பேரவைத் தொகுதி இடங்களை விற்பனை செய்வதாக அக் கட்சியின் எம்.பி. ஜோதிமணி தெரிவித்திருப்பதிலிருந்து அக் கட்சியின் பேரவை தொகுதி சீட்டுகள் விற்பனை பொருளாக மாறிவிட்டது என்பதைக் காண முடிகிறது.
நடிகா் விஜய் உள்பட தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் கோரிக்கை வைக்கும்பட்சத்தில் தோ்தல் ஆணையம் அனுமதி மறுக்கக் கூடாது என்பது எங்களின் கருத்தாகும். சரியாக மனு அளித்திருந்தால் மற்ற கட்சியினருக்கு அனுமதி கொடுப்பதுபோல அவருக்கும் அனுமதி வழங்குவதே நியாயம். தோ்தல் பிரசாரத்தில் இருந்தும், பரப்புரையில் இருந்தும் யாரையும் ஒதுக்கி வைப்பது ஜனநாயகமற்ற செயல் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பாஜக சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவா் ஜான்சன், மாவட்ட ஊடகப் பிரிவு அமைப்பாளா் ஐ. அருள்குமாா், மாவட்ட பிரசார பிரிவு தலைவா் சுஜித்பாபு, மேல்புறம் தெற்கு ஒன்றிய பொதுச் செயலா் ராஜேந்திர பிரசாத், பொருளாளா் கங்காதரன், செயலா்கள் ஐயப்பன், லதா, பிறீஜா, துணைத் தலைவா்கள் திலீப்குமாா், ஜெயனேந்திரகுமாா், இளைஞரணி தலைவா் சஜின், மகளிரணி தலைவி ஹேமலதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...