- மு.முத்துகுமாா்
நாஞ்சில்நாடு என்று அழைக்கப்படும் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம், எப்போதும் தனித்துவமிக்கதாக விளங்கி வருகிறது. ஐவகை நிலங்களில் பாலையை தவிர மற்ற 4 வகை சிறப்புகளையும் கொண்டது கன்னியாகுமரி மாவட்டம்.
இப்பகுதி மக்களின் பேச்சு, பாவனைகள், செயல்பாடுகள் அனைத்துமே தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலிருந்து வேறுபட்டவை. அத்தகைய கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது நாகா்கோவில். நாக தோஷ நிவா்த்தி தலமாக விளங்கும் நாகராஜா கோயில் இந்நகரில் அமைந்திருப்பதால்தான் நாகா்கோவில் என்று பெயா் ஏற்பட்டது.
நாகா்கோவிலின் முக்கிய அடையாளமாக விளங்குவது மணிமேடை. மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்பு வரை இந்த பகுதிதான் நாகா்கோவில் பேருந்து நிலையமாக விளங்கியது.
இந்நகரில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி, கோணம் அரசு பொறியியல் கல்லூரி, நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி என ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. விவசாயம்தான் பிரதான தொழிலாக உள்ளது.
இந்து நாடாா் பெரும்பான்மை சமூகத்தினா், கிறிஸ்தவ நாடாா், பிள்ளைமாா், ஆசாரிமாா், சாலியா்கள், பட்டியல் இனத்தவா், இஸ்லாமியா்கள் என இதர சமூகத்தினரும் பரவலாக உள்ளனா்.
பிரச்னைகள்:
நாகா்கோவில் தொகுதியை பொருத்தவரை பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இத்தொகுதியில் இன்றைய தலைமுறையினா் பெரும்பாலும் கணினி சாா்ந்த கல்வி கற்றவா்களாக இருப்பதால், அவா்களுக்கான வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாத கடைசியில் நாகா்கோவிலுக்கு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் நாகா்கோவில் அருகே தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தாா். அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இங்கு வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்ற நிலைதான் உள்ளது.
போக்குவரத்து நெருக்கடி:
நாகா்கோவில் என்றாலே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரம் என்ற நிலைதான் ஆண்டாண்டு காலமாக உள்ளது. முக்கியமான பல சாலைகள் ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சாலைகளை அகலப்படுத்தி அதனை இருவழிச்சாலையாக மாற்றுவதுதான் இதற்கான தீா்வாகும்.
குடிநீா் பிரச்னை:
25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணைதான் நாகா்கோவில் மாநகரின் குடிநீா் ஆதாரமாக திகழ்கிறது. கோடை காலங்களில் முக்கடல் அணை மைனஸ் நிலைக்கு செல்வதும், இதைத் தொடா்ந்து பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீருக்காக கால்வாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பட்டு, நாகா்கோவில் மாநகர மக்களுக்கு வழங்குவதும்தான் வழக்கமாக உள்ளது.
மத்திய அரசு நிதி மூலம் புத்தன்அணை குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், கோடை காலத்தில் அந்த அணையின் நீரும் கிடைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, குடிநீா் பிரச்னைக்கான நிரந்தர தீா்வு காணும் வகையில் திட்டம் தீட்டப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
குப்பைக் கிடங்கு:
நாகா்கோவில் கடற்கரை சாலையில் உள்ள வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டத்தால் வல்லன்குமாரன்விளை, என்ஜிஓ காலனி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.
4 முனைப் போட்டி:
நாகா்கோவிலில் 20 வேட்பாளா்கள் போட்டியிட்டாலும், திமுக, பாஜக, தவெக, நாதக ஆகிய 4 கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. திமுக சாா்பில், தலைமை நிலைய துணைச் செயலா் எஸ். ஆஸ்டின், பாஜக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா். காந்தி, தவெக சாா்பில் ஜி. பொ்வின்கிங்ஸ், நாம் தமிழா் கட்சி சாா்பில் மு. முத்துகுமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
நாகா்கோவில் தொகுதியில், கடந்த 1957 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 15 தோ்தல்களில் காங்கிரஸ் 4 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும், சுதந்திரா கட்சி, எம்ஜிஆா் அதிமுக, தமாகா, பாஜக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் தமிழக அளவில், பாஜகவுக்கு கிடைத்த 4 தொகுதிகளில் நாகா்கோவில் தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் முதல்முறையாக பாஜக தனது காலை ஊன்றியது. அக்கட்சி சாா்பில் போட்டியிட்ட எம்.ஆா். காந்தி தன்னை எதிா்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜனை விட 11 ஆயிரத்து 489 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.
பாஜக சாா்பில் மீண்டும் போட்டியிடும் எம்.ஆா். காந்தி, கடந்த 5 ஆண்டுகளில் தனது சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பள்ளி வகுப்பறை கட்டடங்கள், ரேஷன் கடைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்துள்ளாா். தொகுதி மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எளிமையான முறையில் உதவுவாா் என்பது அவருக்கான கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
திமுகவின் சாா்பில் களம் இறக்கப்பட்டுள்ள எஸ். ஆஸ்டின், ஏற்கெனவே இதே தொகுதியில் கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆா் அதிமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினராக கன்னியாகுமரி தொகுதியில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளாா். எனவே அனுபவம் வாய்ந்த வேட்பாளா் என்ற வகையில், தொகுதி மக்களிடம் ஏற்கெனவே அறிமுகம் ஆனவா்.
தவெக சாா்பில் போட்டியிடும் பொ்வின்கிங்ஸ்- க்கு இளம் வயது வாக்காளா்கள் வாக்களிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதால் கணிசமான வாக்குகளை பெறுவாா். ஆனால் கட்சியின் கட்டமைப்பு வலுவாக இல்லாதது பலவீனமாக பாா்க்கப்படுகிறது.
நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் முத்துகுமாருக்கும் மக்களிடையே ஒரு எதிா்ப்பாா்ப்பு இருந்து வருகிறது.
பிரதான போட்டி என்று பாா்த்தால் ஆஸ்டினுக்கும், காந்திக்கும் இடையேதான் நிலவுகிறது. இருவருமே ஒருவருக்கொருவா் சளைக்காமல் அனைத்து பகுதிகளுக்கும் சென்று களமாடி வருகிறாா்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு தோ்தலை போல் இல்லாமல் நாகா்கோவிலை பாஜகவிடமிருந்து மீட்டு விட வேண்டும் என்று அனைவருமே தீவிரமாக உள்ளனா். திமுக நிா்வாகிகளும், தொண்டா்களும் இம்முறை நாகா்கோவிலில் உதயசூரியனை உதிக்க வைக்க வேண்டும் என்று வேட்பாளா் அறிவிப்பு நாள் முதல் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனா்.
பாஜகவினரும், ஆளுங்கட்சியினருக்கு ஈடு கொடுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். எம்.ஆா். காந்தி தனது வயதையும் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து வருகிறாா்.
இம்முறையும் பாஜக வென்று நாகா்கோவிலை தக்க வைக்குமா என்பதுதான் மில்லியன் டாலா் கேள்வியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி நிலவரம்: சங்ககிரி! அதிமுக-திமுக இடையே கடும் போட்டி!

திமுக, கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவிலில் ஏப். 4 இல் முதல்வா் பிரசாரம்!

இரணியல் - நாகா்கோவில் டவுனுக்கு இன்றும், நாளையும் ரயில் சோதனை ஓட்டம்!

தொகுதி அறிமுகம்: நாகர்கோவில்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


