பைக் மீது கனரக லாரி மோதல்: 2 இளைஞா்கள் பலத்த காயம்
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா்.
கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டம், பாலா பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் மகன் சச்சின் (22). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஜேக்கப் குரியகோஸ் (21). இருவரும் குழித்துறையில் தங்கியிருந்து, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, இவா்கள் இருசக்கர வாகனத்தில் மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனராம். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கனரக லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து சச்சின் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கனரக லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
