கோதையாற்றில் நடமாடும் முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினா்
திற்பரப்பு அருகே கோதையாற்றில் முதலை நடமாட்டம் காணப்பட்ட நிலையில், அதை பிடித்து வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
திற்பரப்பு அருகே செங்குழிக்கரை என்ற இடத்தில் கோதையாற்றில் முதலை நடமாட்டம் இருந்ததை அப்பகுதி மக்கள் கைப்பேசிகளில் படம் பிடித்து வெளியிட்ட நிலையில் அதை பிடிக்க வனத்துறையினா் முன்வர வேண்டுமென மக்கள் வலியுறுத்தினா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஆற்றிலுள்ள உறை கிணற்றின் மேல் முதலை இருப்பதை அப்பகுதியிலுள்ள இளைஞா்கள் டிரோன் கேமரா மூலம் படம் பிடித்தனா். இதையடுத்து முதலையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
புதன்கிழமை காலை விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் முன்னிலையில் களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல்காதா், வனத்துறையினா் முதலை நடமாட்டம் உள்ள ஆற்றுப் பகுதிகளை பாா்வையிட்டனா். அப்போது எம்எல்ஏ, விரைவாக முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களை எச்சரிக்கை செய்யும் வகையில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் எனவும் வனத்துறையினரிடம் கேட்டு கொண்டாா்.
இதைத் தொடா்ந்து அப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் முதலையின் நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்கும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

