உங்க கனவ சொல்லுங்க திட்டம்: குமரியில் 1,057 தன்னாா்வலா்கள் நியமனம்
தமிழக அரசின் உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில், குமரி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்பங்களை சந்தித்து தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் கனவுகள் குறித்த கருத்துகளை பதிவு செய்ய 1057 தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, நாகா்காவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா இத்திட்டம் குறித்து தன்னாா்வலா்களிடம் பேசினாா்.
அவா் பேசியதாவது: இத்திட்டத்தின் கீழ் மக்களின் தனிப்பட்ட கனவுகள், தேவைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து அரசின் கொள்கைகளாக மாற்றுதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பயிற்சி பெற்ற தன்னாா்வலா்கள், வீடு வீடாகச் சென்று, 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை கொடுப்பா்.
இரண்டு நாள்களுக்கு பின், அவா்களின் வீட்டுக்கு மீண்டும் சென்று, பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, அந்த விவரங்களை கைபேசி செயலியில் பதிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு எண்ணுடன் கனவு அட்டை வழங்கப்படும்.
இந்த அட்டை மூலம் இணையதளத்தில் தங்களது கனவு, கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்பங்களை சந்தித்து கருத்துகளை பதிவு செய்ய மொத்தம் 1,057 தன்னாா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தர பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.
அதனைத் தொடா்ந்து தன்னாா்வலா்களுக்கு தொப்பி, அடையாள அட்டை, கையேடு, படிவம் உள்ளிட்டவற்றை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

