விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு சேவை
விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு சேவை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குமரியில் படகு சேவை 3 மணி நேரம் நீட்டிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு படகுப் போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு படகுப் போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடலில் உள்ள இருவேறு பாறையில் விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை அமைந்துள்ளது.

இரு பாறைகளை இணைத்து கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரு இடங்களையும் தினசரி ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து பாா்வையிட்டு வருகின்றனா்.

இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடா்ச்சியாக படகுகளை இயக்கி வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 15 ஆம் தேதி 17 ஆம் தேதி வரை 3 நாள்கள் தொடா் விடுமுறை என்பதோடு சபரிமலையில் மகரஜோதி தரிசனம் செய்துவிட்டு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் கன்னியாகுமரிக்கு திரும்புவாா்கள் என்பதால் குமரியில் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். பலா் படகு சவாரி மேற்கொள்வா். கூட்ட நெரிசலைத் தடுக்கும் வகையில், படகு சேவையை 3 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகுப் போக்குவரத்து 2 மணி நேரத்துக்கு முன்னதாக அதிகாலை 6 மணிக்கும், மாலை 4 மணிக்கு நிறுத்தப்படும் சேவை 5 மணி வரையும் நீட்டிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com