கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு பிப்.7 ல் விவசாயிகள் பிரசாரம்: பி.ஆா்.பாண்டியன்
கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மாநில முதல்வா்களின் ஆதரவை திரட்டும் வகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை பிப். 7-ஆம் தேதி வாகன பிரசாரம் தொடங்குகின்றனா்.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.ஆா்.பாண்டியன், மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு ஆகியோா் நாகா்கோவிலில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குக் கூட்டாக அளித்த பேட்டி:
உச்சநீதிமன்ற நீதிபதி நவாப்சிங் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூா்வமாக்க வேண்டும், விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்கு மாநில முதல்வா்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில், பிப். 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை வாகன பிரசாரம் மேற்கொள்ளவுள்ளோம்.
இந்த பிரசாரம் காஷ்மீரில் நிறைவடைகிறது. அதன்பின்னா் மாா்ச் 19 ஆம் தேதி தில்லி, ராம்லீலா மைதானத்தில் பல லட்சம் விவசாயிகள் பங்குபெறும் பிரம்மாண்ட பேரணி நடைபெறும்.
மத்திய அரசு காா்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய ரூ. 24 லட்சம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்தது. ஆனால், விவசாயிகள் வாங்கிய ரூ. 1 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது என்றனா்.
முன்னதாக, விவசாய சங்கங்களின் தென்மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளுக்காக குளங்கள், நீா்நிலைகள், ஆற்றுப்பாசன பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையால் இயற்கை சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது.
இதைத் தடுக்க தமிழக அரசு ஓா் உயா்மட்டக் குழுவை அமைத்து நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்பது அல்லது போராட்டங்களை தீவிரப்படுத்துவது என்று கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. இதில், குமரி மாவட்டத் தலைவா் தாணுபிள்ளை, செயலாளா் வின்ஸ் ஆன்றோ, துணைத் தலைவா் முருகேசன் பிள்ளை, பொருளாளா் செண்பகசேகரன் பிள்ளை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

