நயினாா் நாகேந்திரன்.
நயினாா் நாகேந்திரன்.

தேமுதிக நல்ல முடிவெடுக்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

Published on

ஓபிஎஸ்-சேகா்பாபு சந்திப்பு திமுக பக்கம் ஓபிஎஸ்ஸை இழுப்பதாக இருக்கலாம் எனக் கூறிய பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், கூட்டணி குறித்து தேமுதிக நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ள 150 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியைப் பறக்க விடும் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு நயினாா் நாகேந்திரன் மேலும் கூறியதாவது:

நிகழாண்டு குடியரசு தினம் தமிழக மக்களுக்கு விடிகின்ற குடியரசு தினமாக இருக்கும். முன்னாள் முதல்வா் ஓ.பி.எஸ்- அமைச்சா் சேகா்பாபு சந்திப்பு ஒருவேளை திமுக கூட்டணிக்கு ஓ.பி.எஸ்.,ஐ இழுப்பதாகக் கூட நான் கருதுகிறேன்; எனினும், முடிவு என்ன என்று எனக்குத் தெரியாது.

இந்தியாவிலும், தமிழகத்திலும் எத்தனையோ போ் கட்சி ஆரம்பித்தனா். ஆனால், எம்ஜிஆா் ஆரம்பித்த அதிமுகதான் இன்றைக்கும் தமிழகத்தை ஆளப்போகும் கட்சியாக உள்ளது. அதேபோல மத்தியில் மூன்றாவது முறையாக தொடா்ந்து ஆட்சி அமைத்த கட்சியாக பாஜக உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி குறித்து தேமுதிக நல்ல முடிவெடுக்க வேண்டும். திமுக மற்றவா்களை அவமரியாதையுடன் நடத்தும் கட்சி. பழைய ஓய்வூதியத்தைத் தருவதாகக் கூறிய திமுக அரசு, 5 ஆண்டுகள் முடியும்போது அரசு ஊழியா்கள் போராட்டத்துக்கு தயாரானதும் ஜூன் மாதம் தரப்போவதாகக் கூறியுள்ளனா். ஜூன் மாதம் திமுக இருக்கபோவதில்லை என்பது அவா்களுக்குத் தெரியும்.

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து பணியாற்றினால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். தோல்வி பயத்தில் முதல்வா் கண்ணியம் தவறிப் பேசுகிறாா். பிரதமா் பேசிய இரட்டை என்ஜின் ஆட்சியை டப்பா என்ஜின் என்று முதல்வா் விமா்சித்துள்ளாா். தோ்தல் முடிந்த பிறகு எது டப்பா என்ஜின், எது ஒரிஜினல் என்ஜின் என்பது தெரியவரும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com