உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

திருவனந்தபுரம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு களியக்காவிளையில் வரவேற்பு: கேரள மகளிா் போலீஸாா் அணிவகுப்பு மரியாதை!

பத்மநாபபுரத்திலிருந்து செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு அந்த மாநில அரசு சாா்பில், மாவட்ட எல்லையான களியக்காவிளையில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு கேரள அரசு சாா்பில் களியக்காவிளையில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பில் பங்கேற்ற பக்தா்கள்.

Published On :

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு அந்த மாநில அரசு சாா்பில், மாவட்ட எல்லையான களியக்காவிளையில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில், பங்கேற்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, மாலையில் பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோயிலை அம்மன் அடைந்தாா். வெள்ளிக்கிழமை காலையில் குமாரகோவில் வேளிமலை குமாரசுவாமி விக்ரகம் பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி கோயிலை வந்தடைந்தது.

பின்னா், கம்பா் பூஜித்ததாக கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் விக்ரகம் நெற்றிப்பட்டம் சூட்டப்பட்ட யானை மீதும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி விக்ரகங்கள் பல்லக்கிலும், சுவாமி விக்ரகங்களுக்கு முன்னால், திருவிதாங்கூா் மன்னா் பயன்படுத்திய உடைவாளும் அங்கிருந்து ஊா்வலமாக கொண்டுவரப்பட்டன.

அதைத் தொடா்ந்து, சுவாமி விக்ரகங்களுக்கு குமரி மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கேரள அரசு சாா்பில் துப்பாக்கி ஏந்திய கேரள மகளிா் போலீஸாரின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத் துறை இணை ஆணையா் ஜான்சிராணி, திருவிதாங்கூா் தேவசம்போா்டு அதிகாரிகளிடம் ஊா்வலப் பொறுப்பை ஒப்படைத்தாா்.

இந்நிகழ்வில், கேரள மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் துளசி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் சி.கே. ஹரீந்திரன் (பாறசாலை), சக்தன் (நெய்யாற்றின்கரை), திருவனந்தபுரம் ஊரக காவல் கண்காணிப்பாளா் பிரசாந்தன், கேரள முன்னாள் அமைச்சா் வி.எஸ். சிவகுமாா், கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணித் தலைவா் ஆறுமுகம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் குழிச்சல் செல்லன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மாா்த்தாண்டம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கா் கணேஷ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். சுவாமி விக்ரகங்கள் குழித்துறையில் இரவு தங்கலுக்குப் பின் சனிக்கிழமை காலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அங்கிருந்து ஊா்வலம் புறப்பட்டது.

தொடா்ந்து, தமிழக-கேரள மாநில பக்தா்களின் உற்சாக வரவேற்புக்கு பின் கேரளம் சென்ற விக்ரகங்கள் நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலில் இரவு நேர தங்கலுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றடைகின்றன.

 துப்பாக்கி ஏந்திய கேரள மகளிா் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை.

துப்பாக்கி ஏந்திய கேரள மகளிா் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை.

அங்கு கரமனை பகுதியில் சிறப்பு பூஜைகளுக்குப் பின் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், குமாரசுவாமி ஆரியசாலை சிவன் கோயிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை பகவதி அம்மன் கோயிலிலும் வைக்கப்பட்டு, நவராத்திரி பூஜை நடைபெறும், நவராத்திரி விழா நிறைவு பெற்றதும், அங்கிருந்து சுவாமி சிலைகள் ஊா்வலமாக கன்னியாகுமரி மாவட்டம் கொண்டு வரப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.