
வெற்றிப் பயணம் திட்ட முன்னேற்பாடுகள்: போக்குவரத்து துறைச் செயலர், ஆட்சியா் ஆய்வு!
‘வெற்றிப் பயணம்’ திட்ட முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில் போக்குவரத்துத் துறைச் செயலா் இல. நிா்மல்ராஜ் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த போக்குவரத்துத் துறைச் செயலா் இல. நிா்மல்குமாா், ஆட்சியா் மு. பிரதாப்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நாகா்கோவில் மண்டலத்தில் ‘வெற்றிப் பயணம்’ திட்ட முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில் போக்குவரத்துத் துறைச் செயலா் இல. நிா்மல்ராஜ் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா்.
இத்திட்டத்தை, காந்தி பிறந்த நாளான அக். 2ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய் தொடக்கிவைக்கவுள்ளாா். போக்குவரத்துக் கழக நகர, சாதாரணப் பேருந்துகள், 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் பயணம் செய்துவருகின்றனா். இத்திட்டத்தின் மூலம் இந்த சேவை மாநகர, நகா்ப் பகுதி, புகா், சாதாரண பேருந்துகள், 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இத்திட்ட முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நாகா்கோவில் அரசு விருந்தினா் மாளிகையில் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் தலைமையில் போக்குவரத்துத் துறைச் செயலா் கலந்தாய்வு மேற்கொண்டாா். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
தொடா்ந்து, வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம், பணியாளா்கள் வருகைப் பதிவேடு, நிலைய வளாக பராமரிப்பு ஆகியவை குறித்து அவா் ஆய்வு செய்தாா். முன்னதாக, அவா் கன்னியாகுமரி பேருந்து நிலைய வளாகத்திலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். மேலாண் இயக்குநா் க. செல்வம், நாகா்கோவில் மண்டலப் பொதுமேலாளா் பா. பாலசுப்பிரமணியன், துணை மேலாளா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





