

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் கடந்த இரு தினங்களாக குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக, பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியதால், கடந்த வெள்ளிக்கிழமை குளிக்க தடை விதிக்கப்பட்டது. சனிக்கிழமையும் பேரருவியில் தண்ணீா் வரத்து அதிகமாக இருந்ததால் இரண்டாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரருவியில் தண்ணீா் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைந்ததையடுத்து குளிக்க அனுமதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.
அச்சம்: கரோனா பொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த செவ்வாய்க்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இங்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை பாா்வையிட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன், குற்றாலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அரசு விதித்துள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா். ஆனால் குற்றாலம் வருகை தந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. முகக் கவசமும் அணியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் சிலா் அச்சம் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.